இன்று விம்பிள்டன் அரையிறுதிகளில் நிக்-நடால், நோவக்-நோரி மோதல்

லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் அரையிறுதி ஆட்டங்களில் இன்று முன்னணி வீரர்கள் நோவக்-நோரி, நடால்-நிக் ஆகியோர் மோதுகின்றனர். லண்டனில் நடக்கும் விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்பார்ப்பு மிகுந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட உலகின் முன்னாள் நெம்பர் ஒன் வீரர்கள் ஸ்பெயினின் ரஃபேல் நடால்(36வயது, 4வது ரேங்க்), செர்பியாவின் நோவக் ஜோகோவிச்(35வயது, 3வது ரேங்க்) தகுதிப் பெற்று உள்ளனர். நடால் 8வது முறையாகவும், நோவக் 11வது முறையாகவும் விம்பிள்டன் அரையிறுதியில் விளையாட உள்ளனர். அனுபவ வீரர்களான இவர்கள் நடப்புத் தொடரில் சில ஆட்டங்களில் முதல் 2 செட்களை இழந்தாலும், அடுத்த 3 செட்களை கைப்பற்றி வெற்றிகளை பெற்றுள்ளனர்.

ஆனால் இவர்களை எதிர்கொள்ளும் பிரிட்டனின் கேம்ரன் நோரி(26வயது,12வது ரேங்க்), ஆஸ்திரேலியாவின் நிக் ஜிர்ஜியோஸ்(27வயது, 40வது ரேங்க்) ஆகியோர்  விம்பிள்டனில் மட்டுமல்ல, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலேயே  முதல்முறையாக அரையிறுதியில் விளையாட உள்ளனர். அதிலும் அனுபவ வீரர்களை எதிர்கொள்கின்றனர். உலகின் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள(22) வென்ற  நடாலுடன், நிக் மோத இருக்கிறார். அதுமட்டுமல்ல நடால் இந்த ஆண்டு  ஆஸி ஓபன், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களை வென்றவர். விம்பிள்டன்னில் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.

அதே நேரத்தில் நிக்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. சமீப காலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரிலும்  கிரீசின் சிட்சிபாஸ்(5வது ரேங்க்) உட்பட முன்வரிசை வீரர்களை வீழ்த்திதான் அரையிறுதி வரை முன்னேறி உள்ளார். அதனால் நடால்-நிக் மோதும் முதல் அரையிறுதியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. அதேபோல் நோரியும் மற்றொரு  அனுபவ வீரர் நோவக் உடன் மோத இருக்கிறார். அவர் இதுவரை வென்ற 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களில் 6 விம்பிள்டன் பட்டங்களாகும்.

இந்த ஆண்டு ஆஸி ஓபனில் ஆட அனுமதிக்காதது, பிரெஞ்ச் ஓபனில்  காலிறுதியில் வெளியேறியது ஆகிய காரணங்களால் முதல் இடத்தை நோவக் இழக்க நேர்ந்தது. அதனால் விம்பிள்டன்னில் வென்று அவற்றை ஈடு செய்யும் முனைப்புடன் விளையாடி வருகிறார். அது நோரிக்கு கடும் சவாலாக இருக்கும். கூடவே நடப்புத் தொடரில் நோரி வீழ்த்தியவர்கள் எல்லாம் அவரை விட தர வரிசையில் பின் தங்கி இருப்பவர்கள். ஆனாலும் வெற்றியை எளிதில் விட்டுத்தர மாட்டார் என்பதால் நோவக்-நோரி மோதும் ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories: