கடப்பாக்கம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

செய்யூர்: கடப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் மற்றும் கங்கை அம்பிகை, பராசக்தி அம்பிகை கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில் பிரத்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் மற்றும் கங்கை அம்பிகை, பராசக்தி அம்பிகை கோயில்கள் உள்ளன. இந்த பழமை வாய்ந்த 2 கோயில்களும் புனரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாகவும் நடந்தது. விழாக்களை ஒட்டி கடந்த 30ம் தேதி முதல் மேளத்தாலங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு, தினமும் கால பூஜைகள், கிராம தேவதைகள் வழிபாடு, வாஸ்து சாந்தி, கோ பூஜை, சுமங்கலி பூஜை, அம்மன்களுக்கு விசேஷ தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை விமான கும்பாபிஷேகங்கள், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள், கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், கலசங்கள் புறப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.  அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது. ஒரே கிராமத்தில் அமைந்துள்ள இரு கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்றதால், கடப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20கும் மேற்பட்ட கிராமப்புறங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமிகளை வழிபட்டனர்.  விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோயில்கள் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

Related Stories: