×

134வது நாளாக நீடிக்கும் போர்; கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்: 3.50 லட்சம் மக்கள் வெளியேற வலியுறுத்தல்

கீவ்: உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 134வது நாளாக நீடித்து வருகிறது. கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அந்த மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் ஆகிய 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் உள்ளன. ஒரே சமயத்தில் அந்த 4 நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன. அந்த நகரங்கள் மீது ரஷ்ய படைகள் இரவு, பகல் பாராமல் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருவதாக மாகாண கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வகையில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார். ரஷ்ய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால் டொனெட்ஸ்க் மாகாணத்தில் வசிக்கும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு பாவ்லோ கைரிலென்கோ வலியுறுத்தி உள்ளார். இதனிடையே உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல்களை விரிவுப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் அரசு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த செவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் ஆகிய இரு நகரங்களையும் அண்மையில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. இதன் மூலம் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக ரஷ்ய படைகளிடம் வீழ்ந்தது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.


Tags : Russia ,eastern Ukraine , War goes on for 134th day; Russia continues offensive in eastern Ukraine: 3.50 lakh people urged to leave
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!