×

சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியல்: தாம்பரம் அருகே பரபரப்பு

தாம்பரம்: சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதில், சிட்லப்பாக்கம் ஏரி அருகேயுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கடந்த சில மாதங்களாக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பால் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக வசித்து வருவதாக கூறி, ஏரி பகுதிக்கும், எங்கள் வீடுகள் உள்ள பகுதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே வீடுகளை அகற்றக்கூடாது என  அதிகாரிகள் கொடுத்த நோட்டீசை வாங்க மறுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த மாதம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் வந்தபோது, எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை திருப்பி  அனுப்பினர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு சம்பவ இடத்திற்கு வந்து, ஆதரவு தெரிவித்ததுடன் 60 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை இங்கிருந்து அகற்றக்கூடாது. அப்புறப்படுத்த முயற்சித்தால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இதனிடையே ஆக்கிரமிப்பாளர்கள் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து, வீட்டுமனை பட்டா வழங்க கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் இன்று காலை சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள்  தடுத்துநிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிட்லப்பாக்கம் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Lake Sitlapakam , Sudden road blockade to condemn the officials who came to remove the encroachment of the Chitlapakkam lake: There is commotion near Tambaram
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...