உதய்பூர்: உதய்பூரில் நுபுர் சர்மாவை ஆதரித்தது தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. முகமது நபிகள் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டார். இந்நிலையில், கடந்த 28ம் தேதி மதியம் இவருடைய கடைக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவன், செல்போனில் படம் பிடிக்க, மற்றொருவன் கடைக்குள் சென்று துணி தைக்க அளவு எடுக்கும்படி லாலிடம் கூறினான். உடனே அவரும் அளவு எடுக்க தொடங்கியபோது, அந்த வாலிபர் திடீரென தன்னிடம் இருந்த வாளால் கழுத்தை அறுத்தார்.
அதே இடத்தில் லால் துடிதுடிக்க இறந்தார். இந்த காட்சிகள் முழுவதையும் வெளியே நின்றிருந்த மற்றொரு வாலிபன் வீடியோ எடுத்தான். பின்னர், இருவரும் ஒன்றாக இணைந்து, பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலையை செய்த ரியாஸ் அக்தர், கோஸ் முகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் யாஷ் டெலி, தருண் டெலி ஆகியோருக்கு அரசு வேலை வழங்க ராஜஸ்தான் அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. மேலும் தக்லி நடுத்தர நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் நீரில் மூழ்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் மறுவாழ்வுக்காக ஒரு முறை சிறப்பு கருணைத் தொகை ரூ.21 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பணி நியமன விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் அரசின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் பல்வேறு செய்தி இணையதளங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், காலத்தின் தேவைக்கேற்ப, மக்கள் நலனுக்கான மாநில அரசின் கொள்கை வழிகாட்டுதல்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.