போரூர் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பூந்தமல்லி: சென்னை போரூர், மங்களா நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இக்கோவிலை சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின.

இதைத் தொடர்ந்து யாக பூஜைகள், அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகளுடன் வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை 6ம் கால யாகபூஜைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து, 5 கலசங்கள் கொண்ட ராஜகோபுரம், மூலவர் விமானம், பிரகார சன்னதிகளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர், உற்சவர் மற்றும் பிரகார சன்னதிகளில் எழுந்தருளியுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்எம்டி.டீகாராமன், மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, 153வது வட்ட மாமன்ற உறுப்பினர் சாந்தி ராமலிங்கம், கும்பாபிஷேக விழாக் குழு தலைவர் ஜி.நடராஜன், ஆலோசகர் பி.குமரேசன், கோயில் நிர்வாக தலைவர் துரை.பத்மநாபன், செயலாளர் பி.குருசாமி, நிர்வாகிகள் கே.பி.முருகன், ஆர்.பாபு, ஜெ.தேவராஜன், ஆர்.சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: