×

டெல்டா மாவட்ட விவசாயிககளுக்கு தங்கு தடையின்றி ரசாயன உரங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; ​நடப்பாண்டில், பருவமழை மிகவும் சாதகமானதாக இருப்பதாலும், மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படும் நாளான ஜுன் 12 ஆம் தேதிக்கு பதிலாக தமிழக வரலாற்றில் முதன்முறையாக, முதலமைச்சர் மே மாதம் 24 ஆம் தேதியே திறக்க உத்தரவிட்டார்.

வாய்க்கால்களை உரிய காலத்தில் முழுமையாக தூர்வாரவும் அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக ரூ.61 கோடி மதிப்பில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் முதலமைச்சர் முன்னதாக நடவடிக்கை எடுத்ததார். இதனால், நடப்புக் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடி வழக்கத்துக்கும் அதிகமாக 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் சாகுபடி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தங்கு தடையின்றி அனைத்து ரசாயன உரங்களும் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ​

அதன்படி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஜுன் மாதத்திற்கான உரத் தேவையான 27,340 மெட்ரிக் டன் யூரியா, 10,010 மெட்ரிக் டன் டிஏபி 6,160 மெட்ரிக் டன் பொட்டாஷ், 9,480 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் 22,280 மெட்ரிக் டன் யூரியா, 9,980 மெட்ரிக் டன் டிஏபி, 8,040 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 13,180 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் என்ற அளவில் டெல்டா மாவட்டப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை மையங்களில் 25,310 மெட்ரிக் டன் யூரியா, 20,000 மெட்ரிக் டன் டிஏபி, 13,360 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 34,430 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது.

நடப்பாண்டில் யூரியா மற்றும் டிஏபி உரங்களின் கூடுதல் தேவையினை நிறைவேற்றிட, பிரதி செவ்வாய்கிழமைதோறும், ஒன்றிய அரசின் இணைச் செயலாளரால் (உரங்கள்) நடத்தப்படும் காணொலி ஆய்வு கூட்டங்களிலும், ஒன்றிய அரசின் இணைச் செயலாளருக்கு (உரங்கள்) கடிதம் வாயிலாகவும் ஜுன் மாதத்திற்கு கூடுதல் ஒதுக்கீடாக 20,000 மெட்ரிக் டன் யூரியா மற்றும் 10,000 மெட்ரிக் டன் டிஏபி உரத்தினை வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 12,513 மொத்த மற்றும் சில்லறை உர விற்பனை நிலையங்களில் சிறப்பு ஆய்வுக் குழுவினரால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது சட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 42 உரக் கடைகளின் உரிமம் தற்காலிகமாகவும் 5 உரக்கடைகளின் உரிமங்கள் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக கலவை உரங்களை தயார் செய்வதற்கு பதுக்கப்பட்ட 184 மெட்ரிக் டன் உரங்கள் கைப்பற்றப்பட்டு 5 கலவை உர உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பயிரின் தேவைக்கு அதிகமாக உரமிடும்போது, சாகுபடி செலவு அதிகமாவதோடு, பூச்சி, நோய் தாக்குதலும் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும் என்பதால், விவசாயிகள் பயிரின் தேவைக்கேற்ப உரம் கொள்முதல் செய்து பயன்படுத்துகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delta district ,Minister ,MRK Panneerselvam , Measures to distribute chemical fertilizers without hindrance to the farmers of Delta district; Information from Minister MRK Panneerselvam
× RELATED 400இடங்களில் பாஜக வெற்றி என்பதில்...