×

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இன்று பிரசவத்தின் போது, தாய் இரட்டை குழந்தைகள் சாவு; உறவினர்கள் போராட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும் அவரது வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளும் இறந்தனர். இதனால் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்(26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கரி(21) நிறைமாத கர்ப்பிணி. இன்று அதிகாலை சங்கரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதனால் அவரை கணவர் மற்றும் உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பிரசவ வார்டில் போதிய டாக்டர்கள் இல்லை எனவும், இதனால் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சையின்போது சங்கரியும், அவரது வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டனர். இதையறிந்த உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையை எதிரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து வந்த டாக்டர்களிடம் ‘சிகிச்சை அளிக்க போதிய டாக்டர்கள் இல்லாததால்தான் தாயும், 2 குழந்தைகளும் இறந்து விட்டனர்’ எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். பின்னர் சங்கரியின் சடலத்தையும் பெற மறுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மற்றும் மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சிவசுப்பிரமணியம் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை சமாதானம் செய்தனர்.

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி, 2 குழந்தைகள் பலியான சம்பவம் வாணியம்பாடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Mother Twins ,Vaniyambadi Government Hospital , Mother Twins Died Today During Childbirth at Vaniyambadi Government Hospital; Relatives struggle
× RELATED வாணியம்பாடி அரசு மருத்துவமனையில்...