தர்மபுரி-பாலக்கோடு ஜிட்டாண்டஅள்ளி வரை 899 கோடியில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரம்: 2 உயர்மட்ட மேம்பாலம், 24 இடத்தில் குகை பாலம் அமைகிறது

தர்மபுரி: தர்மபுரி-பாலக்கோடு ஜிட்டாண்டஅள்ளி வரை, 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு 899.25 கோடியில் நான்குவழி விரைவுச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தர்மபுரி அருகே அதியமான்கோட்டை-ஓசூர் பைபாஸ் சாலை, சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் தர்மபுரி மாவட்டத்திற்குள் செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் ஓசூர், பெங்களூரு சென்றன. நான்குவழி தங்க நாற்கர சாலை அமைத்த பின்னர், இந்த சாலையில் போக்குவரத்து சற்று குறைந்தது. இருந்தாலும் நூற்றுகணக்கான கனரக வாகனங்கள், தினசரி இந்த சாலையின் வழியாகத்தான், தற்போதும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள இருவழிச்சாலையை நான்கு வழி விரைவு சாலையாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சாலையின் இருபுறமும் சர்வே செய்து, அளவு கல் நடப்பட்டு, சாலை பணிகள் தொடங்கப்பட்டது. தர்மபுரி-பாலக்கோடு ஜிட்டாண்டஅள்ளி வரை 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 899.25 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கடந்த மாதம், சென்னை வந்த பிரதமர் மோடி இந்த சாலை திட்டப்பணியை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நான்குவழி விரைவு சாலை அமைக்கும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. தர்மபுரி சோகத்தூர் கூட்ரோடு, பாப்பாரப்பட்டி கூட்ரோட்டில், 2 இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மேலும், 24 இடங்களில் குகை பாலங்கள் அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட எல்லையான ஜிட்டாண்டஅள்ளி வரை பாலக்கோடு தாலுகாவில் உள்ள 20 கிராமங்களில், 172 ஹெக்டேர் விவசாய நிலங்கள், தர்மபுரி தாலுகாவில் 22 ஹெக்டேர் என மொத்தம் 240 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தி, இந்த சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சாலை விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதியின் வழியாக செல்வதற்கு, பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாததால், சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தர்மபுரி- ஜிட்டாண்டஅள்ளி வரை சாலையின் இருபுறமும் இருந்த ஆயிரக்கணக்கான புளியமரம், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், தென்னந்தோப்புகள், மாந்தோட்டம், வீடுகள் அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அதியமான்கோட்டை-ஓசூர் பைபாஸ் சாலை ஒரு காலத்தில் ஓசூர், பெங்களூரு செல்லும் முக்கிய சாலையாக இருந்தது. தங்க நாற்கர நான்கு வழிச்சாலை அமைத்த பின்னர், இந்த சாலையின் பயன்பாடு குறைந்தது. ஆனாலும், சில கனரக வாகனங்கள் இன்றும் அதியமான்கோட்டை-ஓசூர் பைபாஸ் சாலையில் தான் செல்கின்றன. சரக்குகள் கொண்டு செல்ல இந்த சாலை பாதுகாப்பானதாக இருப்பதால், லாரி டிரைவர்கள் இந்த சாலையை விரும்புகின்றனர். 6 வழிச்சாலைக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு, தற்போது நான்குவழி விரைவு சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் இருந்த இந்த சாலை, தற்போது தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: