×

ரயில்வே, மார்க்கெட், மால்கள் என பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் பொது இடங்களான ரயில்வே, மார்க்கெட், மால்களில் கூடும் பொதுமக்கள், மாஸ்க் அணியாவிட்டால்,  ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நோய் பரவல் சற்று ஓய்ந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக சென்னை பெருநகர் உட்பட தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், திரவ சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏணைய பொது இடங்களில் ‘பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ எனவும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு நேற்று முதல் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

Tags : Chennai Metropolitan Police , Rs 500 fine for not wearing masks in public places like railways, markets, malls: Chennai Metropolitan Police warns
× RELATED மோப்ப நாய் பிரிவிற்கு புதிதாக...