பொதுக்குழுவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்ற கருத்துப்படி உயர் நீதிமன்றத்தில் அப்பீல்: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற கருத்துபடி உயர் நீதிமன்றத்தில் அப்பீலுக்கு போயிருக்கிறோம் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறினார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஓபிஎஸ்சின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: கொடநாடு விவகாரத்தில் பல பேர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை தமிழக அரசு கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். எங்களை, அரசியலில் வளர்த்து ஆளாக்கிய ஜெயலலிதா வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடித்து வெளி உலகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணம். பொதுக்குழு நடத்துவதற்கு தடை கோரி நீதிமன்றத்துக்கு போய் இருக்கிறோம். உச்ச நீதிமன்ற கருத்தில், எங்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு அப்பீலுக்கு போயிருக்கிறோம். நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: