போக்சோ சட்டத்தால் வேலைப்பளு அதிகரிப்பு மகளிர் காவல் நிலையங்களை புறக்கணிக்கும் பெண் போலீசார்

சென்னை: போக்சோ சட்டத்தால் வேலைப்பளு அதிகரித்துள்ளதால்  அனைத்து மகளிர் காவல் நிலையங்களை பெண் போலீசார் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் 1973ம் ஆண்டு கலைஞரால் பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர். அதன் பின்பு நாகரிக வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்களை பெண்களே விசாரிக்கும் வகையில் 1992ம் ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

சென்னையில் 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் தமிழக முழுவதும் 200க்கும் மேற்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு இழக்கப்படும் அநீதிகள் உள்ளிட்டவற்றை முழுக்க முழுக்க பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை செய்து அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.

அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் பெண் போலீசார் அதிக அளவில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு செல்ல விருப்பப்பட்டனர். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவை தவிர்த்து குடும்ப பிரச்னைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் மட்டும் விசாரிக்கும் மகளிர் காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து போட்டி போட்டுக் கொண்டு அங்கு சென்று பணியாற்றி வந்தனர். காலப்போக்கில் பெண்களுக்கு எதிராக அதிக புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் மகளிர் காவல் நிலையங்களுக்கு செல்வதை சற்று பெண் போலீசார் குறைக்க தொடங்கினர்.

இந்நிலையில், 2012ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தால் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் எப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் காவல் நிலையங்களாக மாற தொடங்கின. இதனால் பெண் போலீசாருக்கும் வேலை பளு அதிகரித்தது. இதனால் உஷாரான பெண் போலீசார் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவு காவல் நிலையங்களை தேடி அங்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு செல்ல பெண் போலீசார் தயக்கம் காட்டினர்.

இதனால் வழக்குகள் தேங்க ஆரம்பித்தன. அனைத்து பொறுப்புகளையும் இன்ஸ்பெக்டர்களே கவனிக்கும் வகையில் வேலை பளு அதிகரித்தது ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் காவல் நிலைய எல்லையை பொறுத்து காவலர்களின் எண்ணிக்கை அமையும். அந்த வகையில் குறைந்தது 20 பேராவது ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இருந்தால்  போதுமானதாக இருக்கும். ஆனால் தற்பொழுது பல காவல் நிலையங்களில் ஒற்றை இலக்கில் பெண் போலீசார் எண்ணிக்கை உள்ளது.

 அந்த வகையில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் இரண்டு பேர் நீதிமன்ற பணிக்கு சென்று விடுகின்றனர். மீதி 2 பேர் பாரா எனப்படும் காவல் பணியில் ஈடுபடுகின்றனர். ஒருவர் கம்ப்யூட்டர் வேலை செய்கிறார். மீதமுள்ள 3 பேர் மட்டுமே வழக்கை விசாரிக்க வேண்டி உள்ளது. இதேபோன்று பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 11 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

 எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 12 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவ்வாறு சென்னையில் உள்ள பல அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. உண்மையிலேயே ஆட்கள் பற்றாக்குறை என்பது பெண் போலீசார் இல்லாமல் இந்த பற்றாக்குறை ஏற்படவில்லை. பெண் போலீசார் மகளிர் காவல் நிலையங்களுக்கு செல்ல மறுத்து அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவில் பணிபுரிவதால் இந்த செயற்கையான ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரியும் பல இன்ஸ்பெக்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயர் அதிகாரிகள்தான்முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்

சென்னையில் பணிபுரியும் காவல் நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், `போக்சோ சட்டம் வந்த நாள் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிகள் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன. இதனை பெண் போலீசார் விரும்பவில்லை. குடும்ப சண்டை, கணவன் மனைவி பிரச்னை உள்ளிட்ட பஞ்சாயத்துக்களை மட்டும் விசாரித்து வந்த அவர்களுக்கு போக்சோ சட்டத்தில் உள்ள சட்ட வழிமுறைகளால் வேலை பளுவை எதிர்கொள்ள முடியாதது தான் இதற்கு காரணம். குறிப்பாக ஒரு போக்சோ வழக்கை விசாரிக்கும் போது பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டும். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன் பிறகு ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். எதிரியை தேடி கைது செய்ய வேண்டும். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும். மேலும் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு சாட்சிகளை விசாரிக்க வேண்டும்.  

அனைத்து மகளிர் நீதிமன்றம் போக்சோ நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு தினமும் சென்று வழக்கை பார்க்க வேண்டும். இது போக மற்ற வழக்குகளையும் பார்க்க வேண்டும் இதனால் பெண் போலீசார் அதிக வேலை பளுவை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கவே சட்டம் ஒழுங்கு அல்லது குற்றப்பிரிவை தேடி செல்கின்றனர். அங்கு சென்றால் 8 மணி நேரம் வேலை மட்டும் செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விடலாம். அதிலும் பல இடங்களில் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன். பந்தோபஸ்துக்கு செல்ல மாட்டேன் என சண்டை போட்டுக் கொண்டு பல பெண் காவலர்கள் சொகுசாக காவல் நிலையங்களில் மட்டும் வேலை பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர்.

மேலும் பெண் காவலர்களை ஆண் இன்ஸ்பெக்டர்கள் மிரட்டி வேலை வாங்குவதும் கிடையாது. பெண்கள் என விட்டு விடுகின்றனர். ஆனால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் இன்ஸ்பெக்டர்கள் கண்டிப்பாக வேலை முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கண்டிப்பாக கூறி விடுகின்றனர். இதனால் எதற்கு இங்கு வந்து மாட்டிக் கொண்டு கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணி மகளிர் காவல் நிலையங்களை முற்றிலுமாக பெண் போலீசார் தவிர்த்து வருகின்றனர்.

 இதற்கு உயர் அதிகாரிகள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண் போலீசார் அவர்களது சர்வீஸில் இத்தனை வருடங்கள் மகளிர் காவல் நிலையங்களில் கண்டிப்பாக பணியாற்றி இருக்க வேண்டும் என உத்தரவு போட்டு அதனை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே வேலைக்கு பயந்து ஒதுங்கும் பெண் போலீசாரும் கண்டிப்பாக மகளிர் காவல் நிலையங்களில் பணியாற்றக் கூடிய சூழல் உருவாகும். இல்லையென்றால் உயர் அதிகாரிகளை காக்கா பிடித்துக் கொண்டும் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டும் தங்களது காலத்தை ஓட்டி விடக் கூடிய சூழ்நிலைதான் இருக்கும்’ என தெரிவித்தார்.

Related Stories: