×

தடகள வீராங்கனை பிடி.உஷா உள்பட 4 பேர் தேர்வு இளையராஜாவுக்கு எம்.பி. பதவி: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி. உஷா உள்ளிட்ட 4 பேருக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் 1200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது தவிர, சிம்பொனி இசையமைத்த ஒரே இந்திய இசைக்கலைஞராவார். இந்நிலையில், இளையராஜா, கேரளாவை சேர்ந்த தடகள வீராங்கனை பிடி. உஷாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்கி இருப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ``இளையராஜா என்ற படைப்பு மேதை, தலைமுறை தலைமுறையாக மக்களை கவர்ந்தவர். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அதே நேரம், அவரது வாழ்க்கைப் பயணம் ஊக்கமளிக்க கூடியதாக உள்ளது. அவர் ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இந்த அளவு சாதித்துள்ளார். அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்று தெரிவித்துள்ளார். இவர்கள் தவிர, திரைப்பட இயக்குநர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவின் வீரேந்திர ஹெக்டே ஆகியோரும் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக உள்ளனர்.

இளையராஜா தற்போது அமெரிக்காவில் உள்ளார். 79 வயதாகும் இளையராஜாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2018ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்தது. சமீபத்தில் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட  நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அப்போதே இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Usha ,Ilayaraja ,Modi , 4 people including athlete PT. Usha were chosen as MPs for Ilayaraja. Post: Greetings Prime Minister Modi
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...