×

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் இலையை விழுங்குமா தாமரை?...எடப்பாடி, பன்னீர்செல்வம் நடத்தும் பங்காளி சண்டையில் கலகலத்து போன அதிமுக கூடாரம்

அதிமுக பிளவு படுவது இது முதல் முறை இல்லை. எம்ஜிஆரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், போர்க்கொடி தூக்கினார். கட்சியை உடைக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது அதிமுக. அப்போது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை முடக்கப்பட்டன. பின்னர் ஜானகி விட்டுக் கொடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கியதால் அதிமுகவுக்கு உயிரூட்டப்பட்டது. பின்னர் 1996ல் மீண்டும் அதிமுக உடைந்தது. அதிமுக, போட்டி அதிமுக உருவானது. அதில் திருநாவுக்கரசர், முத்துசாமி, கண்ணப்பன் ஆகியோர் போட்டி அதிமுகவை தொடங்கினர். சரி சமமாக கட்சி உடைந்தது. ஆனால் போட்டி அதிமுக தலைவர்களுக்குள் ஏற்பட்ட தலைமை போட்டியால் போட்டி அதிமுக செயல் இழந்தது. இதனால் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவே நீடித்தது.

 தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை உடைத்தார். அவருக்குப் பின்னால் 12 எம்எல்ஏக்கள் சென்றனர். ஆனால் அவர் கட்சியை முழுமையாக உடைக்காததால், தனி அணியாகத்தான் அதிமுகவில் செயல்பட்டு வந்தார். சசிகலா சிறைக்கு சென்றதால், டிடிவி தினகரன் கட்சியை உடைத்தார். அப்போது பிரிந்து இருந்த பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கை கோர்த்தார். இதனால் டிடிவி தினகரன் தனிக் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கட்சியை மீட்கப்போகிறேன் என்று புறப்பட்டார். ஆனால் அவரால் ஒரு ஆதரவாளரைக் கூட தன் பக்கம் இழுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு நிலையை ஓ.பன்னீர்செல்வம் எடுக்க ஆரம்பித்தார். இதனால் அவரை கட்சியில் இருந்து தூக்கி எறிய திட்டம்போட்டு, காய்களை நகர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.

 ஆனால், டிடிவி தினகரனுக்கு 35 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் கட்சியும், ஆட்சியும் பறிபோய் விடும் என்று நினைத்துத்தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரசத்துக்கு சம்மதித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, கட்சியின் தலைமைப் பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி விட்டுக் கொடுத்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். அதன்பின்னர் ஆட்சியையும், கட்சியையும் முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இப்போது இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தையும், அவரது ஆதரவாளர்களையும் தூக்கி எறிய தயாராகிவிட்டார். ஆனால், அவர் தனது ஆட்சியை தக்க வைக்க அப்போது ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக் கொடுத்தது, இப்போது அவருக்கு வினையாக முடிந்துள்ளது என்கின்றனர் கட்சி வட்டாரத்தினர். கட்சிக்கு நான்தான் தலைவர் என்று பன்னீர்செல்வம், நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடத் தொடங்கி விட்டார். பொதுவாக ஓபிஎஸ், எதிலும், எப்போதும் ‘ரிஸ்க்’ எடுக்காதவர், தற்போது பெரிய அளவில் ரிஸ்க் எடுக்கிறார் என்றால், அதற்கு பின்புலம் இருக்க வேண்டும் என்பதாகத்தான் தற்போது அரசியல் பார்வையாளர்களின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது.

 ஓ.பன்னீர்செல்வதுக்குப் பின்னால் பாஜ ஒளிந்துள்ளது என்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த பாஜ தலைவர் ஒருவர், ஒன்றிய அரசுக்கு ஆதரவான ஆடிட்டர் ஒருவர், ஜூடிசியல் புரோக்கர் ஒருவர் என 3 பேர்தான் பன்னீர்செல்வத்தை இயக்கி வருகிறார்கள் என தெரிவித்தார் அரசியல் பார்வையாளர் ஒருவர். மேலும் அதில் பாஜ தலைவரின் கணக்கு வேறு மாதிரி உள்ளது என்கிறார் அவர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, கொங்கு பகுதியில்தான் வெற்றி பெற்றது. இதற்கு காரணம், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, பல்வேறு திட்டங்களை கொங்கு பகுதிக்கு கொண்டு சென்றதோடு, தான் சார்ந்த சமூகத்தினருக்கும் உதவிகளை வாரி வழங்கினார். இதனால் அவருக்கு பின்னால் ஒரு சமூகம் நின்றது. பாஜ தலைவரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். தான் சார்ந்த சமூகம் தனக்கு பின்னால் வரவேண்டும் என்றால், அதிமுகவுக்கு இரட்டை தலைமை வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியில் இருக்கக் கூடாது. ஒரு உரையில் இரு கத்தி இருக்க முடியாது. தான் வளர வேண்டும் என்றால், தான் மட்டுமே கொங்கு பகுதியில் தலைமை நிலையில் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். இதனால்தான் பன்னீர்செல்வம் ஆதரவு நிலையை எடுத்துள்ளனர் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, அதிமுக ரெண்டு பட்டு கலகலத்து வருவது பாஜவுக்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பினர் இணையாமல் இருந்தால் இது எதிர்பார்த்த பலனை தரக்கூடும். எனவேதான் கட்சியை மேலும் கலகலத்து போகச் செய்யும் பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில் பலரும் அவர்களுக்கு தெரியாமலேயே பகடைக்காய்களாக ஆக்கப்பட்டு வருகின்றனர் என அரசியல் நோக்கர்கள் பலர் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் சில தலைவர்கள் இதனை உணர்ந்தார்களா என்றே தெரியவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  நிலைமை இப்படியிருக்க, இந்த தீவிரத்தையே அறியாதவர்கள் போல அதிமுகவில் சில ஜோக்கர்களும் இருக்கிறார்கள் என அக்கட்சியினரே பேசிக் கொள்கின்றனர். நீதிமன்றத்தில், கட்சிக்குள், தேர்தல் ஆணையத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல், மைக்கைப் பார்த்தவுடன் சில முன்னாள் அமைச்சர்கள் பேட்டி என்ற பெயரில் சிலரையும் போட்டுத் தாக்குகிறார்களாம். இதனால் அவர்களை அதிமுகவின் ஜோக்கர்கள் என்று பலரும் வர்ணிக்கிறார்களாம். இவ்வாறு அதிமுகவில் பல போட்டிகள், குழப்பங்கள், சிலீப்பர் செல்கள், ஜோக்கர்கள் என்று பலருடன் எடப்பாடி பழனிசாமி பயணித்தாலும், பாஜ நினைப்பதுதான் கட்சியில் நடக்கும். விரைவில் அதிமுக பாஜகவில் ஐக்கியமாகும். அதை நோக்கித்தான் பாஜ காய் நகர்த்துகிறது. புயலுக்கு முன் அமைதி என்பார்கள். அதுபோல ஜனாதிபதி தேர்தல் நடப்பதால், எதிர்க்கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைய வேண்டும் என்பதற்காக டெல்லி பாஜ தலைவர்கள் அதிமுக மோதலை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

தமிழக தலைவர்களிடம், ‘கொஞ்ச காலம் நீங்கள் பாருங்கள்’ என்று சொல்லி ஒதுங்கி இருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவில் புயல் வீசும். அந்த புயலில் அதிமுக சிதறும். பல சிலீப்பர் செல்கள் பாஜவுக்கும், பலர் திமுகவுக்கும் அந்தர் பல்டி அடிப்பார்கள். அப்போது தமிழகத்தில் அதிமுக இல்லாத, திமுக, பாஜ மட்டுமே பெரிய கட்சியாக இருக்கும் தேர்தல்தான் நடக்கும். அதை நோக்கித்தான் பாஜ செல்கிறது. அதற்கு உதாரணங்கள்தான் பல மாநிலங்களில் காணாமல் போன கட்சிகள் சாட்சிகளாக உள்ளன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சின்னத்தை முடக்க செக்?
தென் மாவட்டங்களில் இந்து நாடார்களை குறி வைத்து தமிழிசைக்கு கவர்னர் பதவி, ெபான்.ராதாகிருஷ்ணனுக்கு ஏற்ெகனவே ஒன்றிய ்அமைச்சர் பதவிகளை வழங்கியது பாஜ. தற்போது தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திட்டமும் பாஜகவில் அஜென்டாவில் உள்ளதாம். இதற்கு பன்னீர்செல்வம் கைகொடுப்பார் என்கிறார் டெல்லி தலைவர் ஒருவர். நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தாலும், மொத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் மூலம் கட்சிக்கு செக் வைக்கப்படும் என்கிறார் அந்த டெல்லி தலைவர். இதனால் அதிமுகவின் பெயர், சின்னம், கொடி முடக்கம் உறுதி என்கிறார் அவர்.

பணிய வைக்க ரெய்டு
ஒன்றிய அரசிடம் மிகப் பெரிய ஆயுதமாக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளது. இவர்கள் மூலம் அதிமுகவின் மூத்த தலைவர்கள் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சிக்க வைக்கப்படுவார்களாம். அதன் ஒரு கட்டம்தான் வேலுமணி, எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியவர்களின் வீடுகளில் நேற்று வருமானவரித்துறை ரெய்டு நடத்தியது. ஆந்திராவில் மிருக பலத்துடன் வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டி, இதுபோன்ற துறைகளின் ரெய்டுகளுக்குப் பயந்துதான் பதுங்கிக் கிடக்கிறாராம். இதனால் ஆந்திராவில் பாஜ வேகமாக வளர்ந்து வருகிறதாம். அதேபாணியைத்தான் பஞ்சாப்பிலும் செய்து அம்ரீந்தர் சிங்கை கையில் எடுத்தார்களாம். இப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. கட்சியே காணாமல் போய் விட்டது.

சமுதாய ஓட்டு பலன் தருமா?
பாஜ ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான யுத்தி மூலம் காலூன்றி வருகிறது. மாநிலத்துக்கு மாநிலம் உத்திகள் மாறினாலும் நோக்கம் ஒன்றுதான். இந்த வகையில் தமிழகத்திலும் தனது வாக்குவங்கியாக தேவேந்திர குல வேளாளர்களை பயன்படுத்த திட்டமிட்டது. இதன் முதல் படிநிலையாக தெற்கு மற்றும் மத்திய, மேற்கு மாவட்டங்களில் கணிசமாக வாழும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு பெயர் மாற்றம் அறிவித்து, அவர்களை தன் குடைக்குள் கொண்டு வந்துள்ளது பாஜ. தற்போது பட்டியல் வெளியேற்றத்தை செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்து அவர்களை முழுமையாக தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

‘மணி மணி’யான ஸ்லீப்பர் செல்கள்
தன்னை கட்அவுட் உயரத்துக்கு பெரிய தலைவர் என்று நினைத்து தன் கையில் இருந்த பொன் சட்டியை போட்டு உடைத்தவரான டிடிவி தினகரன் எப்போதும் அதிமுகவில் தன்னுடைய ஸ்லீப்பர் செல் இருப்பதாக கூறுவார். ஆனால் உண்மையில் அவர் சொன்னதெல்லாம் ‘உதார்’ தான் என்று தேர்தல் முடிவுகளும், அணி மாற்றங்களும் நிரூபணம் செய்து வருகின்றன. ஆனால் சத்தமில்லாமல் அதிமுகவில் பலர் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கின்றனர் என்கின்றனர் டெல்லி தலைவர்கள். அதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் மணியை சேர்ந்த மணியான மேற்கு மண்டல தலைவர்கள் பலரும் ஸ்லீப்பர் செல்தான் என்கின்றனர். ஏனெனில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறையிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள டெல்லியில் உள்ள பாஜ தலைவர்களை அவர்கள் அடிக்கடி தனியாக சந்தித்து நட்பு பாராட்டி வருகிறார்களாம். அவர்கள் எப்போது வேண்டுமானாலும், எடப்பாடி ஓட்டிச் செல்லும் பஸ்சில் இருந்து தாவிக் குதித்து, பின்னர் அண்ணாமலை ஓட்டிச் செல்லும் பஸ்சில் ஏற தயாராக இருப்பவர்களாம். இப்படிப்பட்டவர்களை நம்பித்தான் எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருகிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கூட்டணியில் அன்று
பரிதாபத்தில் இன்று
ஏற்கனவே பாஜ கூட்டணியில் இருந்த கட்சிகள் பலவற்றை அக்கட்சி கபளீகரம் செய்து விட்டது என்கின்றனர் டெல்லி தலைவர்கள். பஞ்சாப்பில் சிரோன்மனி அகாலிதளம் கூட்டணியில் சேர்ந்தது. இப்போது அக்கட்சி ஆட்சியை இழந்து, ஆட்சிக்கு வர முடியாமல் தவித்து வருவதோடு கட்சியே கருகத் தொடங்கிவிட்டது. அசாமில், அசாம் கணபரிசத், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மகாராஷ்டிராவில் சிவசேனா, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தில் லோக் தந்திரிக், அப்னா தளம், அரியானாவில் சவுதாலாவின் லோக்தளம் என பல கட்சிகள் கூட்டணி சேர்ந்தபின்னர், பல தலைவர்கள் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். கூட்டணிக் கட்சி காணாமல் போய் வருகிறது. ஆனால் அங்கெல்லாம் பாஜ வளர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து விட்டது. அதே நிலைதான், தற்போது தமிழகத்திலும் ஏற்பட்டு வருகிறது. அதிமுகவை எப்போது கபளீகரம் செய்யலாம் என்ற திட்டத்தின் ஒரு பகுதிதான் பன்னீர்செல்வம் ஏற்படுத்திய திடீர் போராட்டம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இலையை கரைக்கும் இரட்டை தலைமை
 ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற குரல் ஒரு புறம் அதிமுகவில் ஒலித்துக் கொண்டிருக்க, பாஜ ஆடிட்டருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்கிறார்கள் தமிழகத்தில் பாஜ வளர வேண்டும் என்றால், அதிமுக இரட்டை தலைமை வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் தங்களுக்கு வேண்டியவராக இருப்பதால், மக்களவை தேர்தலில் கணிசமான இடங்களை கேட்டு வாங்கலாம் என்று கணக்குப் போடுகிறார் அந்த ஆடிட்டர் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர். அதிமுகவின் வீழ்ச்சியில்தான் பாஜகவின் வளர்ச்சி இருக்கிறது என்று மேலிடம் கருதுவதால்தான் இருவரும் பன்னீர்செல்வத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்படுகிறது.   எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின்போது மக்களவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என தொடர்ந்து தோல்விதான். இதனால் வருகிற மக்களவை தேர்தலிலும் தோல்வி உறுதி. இதனால் கட்சி விரைவில் கலகலத்துப் போய்விடும். இப்போது உடைக்க ஆரம்பித்தால் சட்டப்பேரவைக்குள் அதிமுக தானாகவே நொறுங்கிவிடும். அப்படி நொறுங்கி பாஜகவில் ஐக்கியமாகிவிடும் என்று பாஜ மேலிடம் கணக்குப் போடுகிறதாம். இதனால்தான் அதிமுகவை கபளீகரம் செய்யும் ஒரு சூழ்ச்சியாக ஆடிட்டர் மற்றும் கொங்கு பகுதியை சேர்ந்த பாஜ தலைவரின் நடவடிக்கைகள் இருக்கின்றன என அரசியல ்வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நடத்தி வைக்கும் நாடகம் நானும் ஒரு பாத்திரம்
அதிமுக மோதலுக்கான மொத்த நாடகத்தையும் பாஜதான் நடத்துகிறது. இயக்குநரே பாஜகதான். நடிகர்கள்தான் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் என்கின்றனர். அதேநேரத்தில் அதிமுகவிலும் சுயநலம் உள்ளவர்கள் அதிகமாக உள்ளது அவர்களுக்கு சாதகமாகிக் கொண்டு வருகிறது. அதிமுகவில் பொருளாளர், தலைமை நிலைய செயலாளர், அமைப்புச் செயலாளர் பதவிகளைப் பிடிக்க மூத்த தலைவர்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்கள் சமுதாய ரீதியில் பிரிந்து கிடக்கின்றனர். அதில் பலர் காற்று வீசும் பக்கம் சாயும் தலைவர்களாக உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களாக இருந்த கே.பி.முனுசாமி, செம்மலை, மைத்ரேயன், மா.பா.பாண்டியராஜன் போன்றவர்கள், ஆட்சியின் சுகத்துக்காக எடப்பாடி பக்கம் தாவினர். தற்போது கட்சிப் பதவிக்காக பன்னீர்செல்வத்தை கைவிட்டு அணி மாறிவிட்டனர். அவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமியை கொம்பு சீவி வருகின்றனர். இதை எல்லாம் பாஜ வேடிக்கை பார்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

Tags : Rendu Pattal Koli ,Edapadi ,Bannerselvam , Will the lotus swallow the leaf?, Edappadi, Panneerselvam, partner fight, ADMK
× RELATED ஈவு இரக்கம் இல்லமல் ஒரு ஆட்சி எப்படி...