ஸ்டேன் சுவாமி சாவு பற்றி சுதந்திரமான விசாரணை: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

நியூயார்க்: இந்தியாவில் நீதிமன்ற காவலில் உயிரிழந்த மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் மரண வழக்கில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மனித உரிமை ஆர்வலர் ஸ்டேன் சுவாமி, வன்முறையை தூண்டியதாக எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு ராஞ்சியில் கைதாகி, சிறையில் இருந்த அவர் கடந்தாண்டு ஜூலை 5ம் தேதி திடீரென உயிரிழந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள தலித் ஆதரவு கூட்டமைப்பு, இந்திய அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில், மனித உரிமைகளுக்கான இந்துக்கள், இந்திய குற்ற வழக்குகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய `சிறுபான்மையினர், அவர்களின் ஆதரவாளர்கள் மீதான இந்தியாவின் துன்புறுத்தல்கள்’ என்ற தலைப்பில் நடந்த காணொலி கூட்டத்தில் ஜனநாயக கட்சியின் கலிபோர்னியா தொகுதி எம்பி ஜூவான் வர்காஸ் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், ``ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது,’’ என்று கூறினார்.இந்த தீர்மானத்துக்கு எம்பி.க்கள் ஆன்ட்ரே கார்சன், ஜேம்ஸ் மெக்கோவர்ன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இது தொடர்பான சர்வதேச விமர்சனங்களை ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் மறுத்து உள்ளது.

Related Stories: