எடப்பாடி, வேலுமணி ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கோவை, அருப்புக்கோட்டையில் வருமானவரித்துறை அதிரடி

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு நெருக்கமான கான்ட்ராக்டர்களின் வீடுகள், உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கோவை வடவள்ளியை சேர்ந்தவர் இன்ஜினியர் சந்திரசேகர். இவர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘’நமது அம்மா’’வின் வெளியீட்டாளராகவும் உள்ளார். இவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோவை மாநகராட்சி டெண்டர் பணிகளை எடுத்து செய்து வந்தார்.

அதற்கான கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிக்காத காரணத்தால் வருமான வரித்துறையினர் இவருக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அதற்கு ஆடிட்டர் மூலம் முறையாக பதில் அளிக்கவில்லை. அத்துடன், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது. இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் 50 பேர், நேற்று மதியம் 6 பிரிவாக பிரிந்து இன்ஜினியர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகம், தந்தை வீடு, நண்பர்கள் வீடு என 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சந்திரசேகர் வீட்டில் இருந்த அவரையும், கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலரான அவரது மனைவி ஷர்மிளா உள்பட யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வரவேற்பு அறை, படுக்கை அறை, ஸ்டோர் ரூம், கார்ஷெட் உள்பட அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர். இதில், ரொக்கப்பணம் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இவற்றை, தனித்தனியாக மூன்று பெரிய பைகளில் எடுத்துச்சென்றனர். இதுபற்றிய விவரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை. வடவள்ளி அருகே பாப்பநாயக்கன்புதூரில் சந்திரசேகரின் தந்தை வீடு உள்ளது. இங்கு 6க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

6 இடங்களிலும் நேற்று மதியம் துவங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி ரெய்டு கோவை அதிமுக வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது. இன்ஜினியர் சந்திரசேகர், கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகள் மட்டுமின்றி, ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்பட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மனைவி ஷர்மிளா  ‘ஆலயம் டிரஸ்ட்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். அந்த  அறக்கட்டளை வரவு, செலவு தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறையினர்  அள்ளிச்சென்றனர். ஏற்கனவே வேலுமணி மீதான ஊழல் புகாரில்  லஞ்ச ஒழிப்புத்துறையினர் கான்ட்ராக்டர் சந்திரசேகர் வீட்டில் 2 முறை சோதனை  நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அனந்தபுரி நகரில் எஸ்பிகே அன் கோ நிறுவனத்தலைவர் செய்யாத்துரையின் வீடு, அலுவலகம் உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்நிறுவனமே தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணியை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பேக்கேஜ் டெண்டர் மூலம் எடுத்து செய்து வந்தது. இந்நிறுவனத்தினர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள். விருதுநகர் மாவட்டத்தில் ரூ.650 கோடிக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடிக்கும், சிவகங்கை மாவட்டத்தில் ரூ.600 கோடிக்கும், காஞ்சிபுரம் - திண்டிவனம் பகுதியில் ரூ.800 கோடிக்கும் டெண்டர் எடுத்தும், மதுரையில் கப்பலூர் டோல்கேட் வரை, ரூ.250 கோடிக்கு பாலாஜி டோல்பிளாசா நிறுவனத்தின் பெயரிலும் டெண்டர் எடுத்துள்ளனர். இந்நிறுவனங்களில் கடந்த 2018ல் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் 40 பேர் கொண்ட குழுவினர், 7 கார்களில் அருப்புக்கோட்டை வந்தனர். செய்யாத்துரையின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் நேற்று மதியம் 3 மணி துவங்கி நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். மேலும், செய்யாத்துரையின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழமுடி மன்னார்கோட்டையில் (கேஎம் கோட்டை) உள்ள பூர்வீக வீடு, நிர்வாக அலுவலகத்திலும் 4 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத்தலைமை பிரச்னை பூதாகரமாக நடந்து வரும் நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இவர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்து, இதன்பேரிலேயே இந்த சோதனை நடந்திருப்பதாக பேசப்படுகிறது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பி, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தந்து இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக கட்சியினர் மத்தியில் கருத்து உள்ளது.

* 7 மாநகராட்சி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு விசாரணை

கோவையில் நேற்று வருமான வரித்துறை ரெய்டு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு  பக்கம் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நடந்தது. அதாவது,  கோவை மாநகராட்சியில் உயர் பொறுப்பில் பணிபுரியும் பொறியாளர்கள் பர்மான்அலி,  கனகராஜ், பாலச்சந்தர், கல்யாணசுந்தரம், ராஜேஷ், சபிதா, கலைவாணி ஆகிய 7 அதிகாரிகளிடம் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த  அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள், கோவையை சேர்ந்த சில  குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக வழங்கப்பட்டது ஏன்? என்பது  குறித்தும், இதன்மூலம் யார் யார் எவ்வளவு பணப்பலன் பெற்றார்கள்? என்பது  குறித்தும் விசாரணை நடத்தினர்.

கோவை திருச்சி ரோட்டில் உள்ள தேசிய  நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஓய்வு மாளிகையில் இந்த விசாரணை நடைபெற்றது.  பிற்பகல் 3.10 மணிக்கு துவங்கிய இந்த விசாரணை, மாலை 6.15 மணிக்கு  நிறைவுபெற்றது. இதன்பிறகு, அனைத்து அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: