×

சென்னை விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு செல்ல முயன்ற பயணி கைது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து மஸ்கட் வழியாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற பயணியை கைது செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட் செல்லும் விமானம் தயார் நிலையில் இருந்தது. இதில், செல்ல வேண்டிய பயணிகளின் பாஸ்போர்ட் உள்பட பல்வேறு ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது, வேலூரை சேர்ந்த சந்திரன் (50) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 2017ம் ஆண்டில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டில் சட்டவிரோதமாக சென்று சந்திரன் 6 மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஏற்கனவே, கடந்த 2014ம் ஆண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியார்கள் யாரும் ஏமன், லிபியா நாடுகளுக்கு செல்லக்கூடாது என இந்திய அரசு தடைவிதித்து அமல்படுத்தி உள்ளது. இத்தடையை மீறி செல்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, கடும் தண்டனை வழங்கப்படும் என ஒன்றிய அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்த தடையை மீறி ஏற்கெனவே சந்திரன், ஏமன் நாடு சென்று வந்திருந்ததால், அவரது பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். அவரிடம் கியூ பிரிவு, மத்திய உளவு பிரிவினர் தீவிரமாக விசாரித்தனர்.

அதில், ஏமன் நாட்டுக்கு தடை உள்ளதை அறியாமல் சென்றதாக கூறியுள்ளார். மேலும், இவர் தற்போது ஓமன் நாட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து ஏமன் நாடு செல்லவிருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சந்திரனை குடியுரிமை அதிகாரிகள் வெளியேவிடாமல், சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரனை கைது செய்தனர். பின்னர், அவரிடம் குடியுரிமை உள்ளிட்ட பல்வேறுத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Yemen ,Chennai airport , Passenger arrested at Chennai airport, Yemen
× RELATED மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை...