×

திரிபுராந்தக சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கூவம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 5ம் தேதி காலை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. மாலை மூன்றாம் கால யாக பூஜை ஹோமம், நாடி சந்தானம், மற்றும் தீபாரானையும் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கடக லக்கினத்தில் ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிபுராந்தகர் சுவாமி மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு தீர்த்தப் பிரசாத விநியோகம் நடைபெற்றது. கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திவைத்தனர். இதில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, ஒன்றிய திமுக செயலாளர் மோ.ரமேஷ், காஞ்சிபுரம் தொண்ட மண்டல ஆதினம் 233-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிய ஞானப்பிரகாச பரமாசாரிய சுவாமிகள், திருப்பணிச் செம்மல் பன்னிரு திருமறைக் காவலர் குடியேற்றம் சிவத்திரு ஆ.பக்தவச்சலனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  

கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் சி.லட்சுமணன், கோயில் செயல் அலுவலர் பி.ஜி.பிரபாகரன், தக்கார் எம்.டில்லிபாபு, திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில், மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், எஸ்ஐ இளங்கோ ஆகியோர் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி: சென்னை போரூர் மங்களாநகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன்படி கோயில் புனரமைப்புபணி முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 3ம்தேதி முதற்கால யாக பூஜை தொடங்கியது. 4ம்தேதி காலை 2ம் கால யாக பூஜையும், மாலை 3ம் கால யாக பூஜையும், 5ம்தேதி 4 மற்றும் 5 கால யாக பூஜைகள் நடந்தது.

 இந்நிலையில் நேற்று காலை 6ம் கால யாக பூஜையை தொடர்ந்து 5 கலசங்கள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானம், பிரகார சந்நிதிகளில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தின்போது ஓம் சக்தி பராசக்தி என பக்தர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து மூலவர், உற்சவர் மற்றும் பிரகார சந்நதிகளில் எழுந்தருளியுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவில், போரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாரம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன், மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, 153வது வட்ட கவுன்சிலர் சாந்தி, விழா குழு தலைவர் ஜி.நடராஜன், ஆலோசகர் பி.குமரேசன், கோயில் நிர்வாக தலைவர் துரை.பத்மநாபன், செயலாளர் பி.குருசாமி மற்றும் நிர்வாகிகள் கே.பி.முருகன், ஆர்.பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tripuranthaka Swamy Temple Kolagalam , Tripuranthaka Swamy Temple, Kumbabhishek ceremony,
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...