×

கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வாலிபர் போலீசில் சரண்: என் தாயை ஆபாசமாக திட்டியதால் கற்களால் தாக்கினேன் என வாக்கு மூலம்

புழல்: சோழவரம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வாலிபர் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சோழவரம் அருகே ஆங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுணியம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (54). இவரது கூட்டாளி அலெக்ஸ் (25). இருவரும் கட்டிட கூலித்தொழிலாளிகள். இவர்கள் நேற்றுமுன்தினம்இரவு 10 மணியளவில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி, நல்லூர் சுங்கச்சாவடி அருகே பன்னீர்வாக்கம் செல்லும் சாலையில் ஒரு காலி மைதானத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

போதை தலைக்கு ஏறியதும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிறகு சமாதானம் அடைந்துள்ளனர். பின்னர், இருவரும் அருகே இருந்த பெட்டிக் கடையில் சிப்ஸ் வாங்கியபோது மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலெக்ஸ், அங்கு கட்டிட பணிக்காக வைத்திருந்த கற்களை எடுத்து ரமேஷ்மீது சரமாரி தாக்கியுள்ளார். இதனால், அவர் சம்பவ இடத்திலேயே தலையில் படுகாயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். இதை பார்த்ததும் கூட்டாளி அலெக்ஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  ரமேஷின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அலெக்சை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சோழவரம் காவல் நிலையத்தில் நேற்று காலை  தனது வழக்கறிஞர் முன்னிலையில் அலெக்ஸ் சரணடைந்தார். அப்போது, போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில்,  குடிபோதையில் ரமேஷ் தன் தாயை ஆபாசமாக திட்டியது தனக்கு பிடிக்கவில்லை.

இதனால், எனக்கும் ரமேஷுக்கும் வாய்த்தகராறு முற்றியது. இதில் ஆத்திரமாடைந்த நான், ரமேஷின் தலையில் கற்களால் சரமாரி தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டேன் என வாக்குமூலம் அளித்தார். பின்னர், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், பென்னோரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Saran , Laborer killed, youth surrendered to police, by vote
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்