×

சின்னசேலம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்; பயணிகள் கோரிக்கை

சின்னசேலம்: சின்னசேலம் ரயில் நிலையத்தில் கேண்டீன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய இரு இடங்களில் ரயில் நிலையங்கள் உள்ளது. இதில் சின்னசேலம் ரயில் நிலையம் வழியாக சேலம், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, மங்களூரு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகிறது. மேலும் சின்னசேலம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

இதனால் சின்னசேலம் ரயில் நிலையத்தில் ரயில் வரும் நேரங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடை மேம்பாலம் கட்டி நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு, ரயில் நிலையம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பயணிகளை கவரும் வகையில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய சிறப்புவாய்ந்த சின்னசேலம் ரயில் நிலையத்தில் பயணிகளின் அவசர தேவைக்கு கழிப்பிட வசதி இல்லை. எப்பொழுதும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் ஏற வரும் பயணிகள் அவசர தேவைக்கு முள்வேலி பக்கம் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் செல்லவேண்டி உள்ளது.

அதைப்போல சிறுவர்கள் குடிநீர் குடிப்பதற்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை. அதிக அளவில் பயணிகள், மாணவர்கள், மக்கள் கூடும் இடமாக இருந்த போதிலும் கேண்டீன் வசதி இல்லை. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆகையால் சின்னசேலம் பிளாட்பாரத்தில் கேண்டீன் மற்றும் உணவகங்கள், திண்பண்டங்கள் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Chinnaselam , Basic facilities should be provided at Chinnasalem railway station; Passenger request
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்...