×

லீனாவின் போஸ்டர் விவகாரம்; ‘காளி’ குறித்து பெண் எம்பி சர்ச்சை கருத்து: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் விளக்கம்

கொல்கத்தா: இயக்குனர் லீனாவின் போஸ்டர் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா கூறிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், அது அவரது தனிப்பட்ட கருத்து என்று திரிணாமுல் கட்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த பெண் இயக்குனர் லீனா மணிமேகலை சமீபத்தில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்தார். அதில் ‘காளி’ வேடம் அணிந்த பெண், புகைப்பிடித்துக் கொண்டு, தன்பால் ஈர்ப்பாளர்களின் கொடியை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசுகையில், ‘என்னை பொறுத்தவரை காளி என்பவர் மது, மாமிசத்தை ஏற்றுக் கொள்ளும் கடவுள்தான்; மதம் என்பது எப்போதும் தனிப்பட்ட வரம்பில் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார். இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மஹுவா மொய்த்ரா வெளியிட்ட பதிவில், ‘பொய் சொல்வதன் மூலம் சங்கிகள் சிறந்த இந்துக்களாக ஆக முடியாது.

நான் எந்த திரைப்படத்தின் போஸ்டரையும் ஆதரிக்கவில்லை. எனது பேச்சில் புகைபிடிக்கும் வார்த்தையைக் குறிப்பிடவில்லை’ என்று தெரிவித்திருந்தார். திரிணாமுல் எம்பியின் கருத்து மேற்குவங்கத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தாகும். அவை எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை’ என்று விளக்கம் அளித்துள்ளது.

வருத்தம் தெரிவித்த அருங்காட்சியகம்
கனடா நாட்டின் டொராண்டோ ஆகா கான் அருங்காட்சியகத்தில் சமீபத்தில் காளி படத்தின் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில், பெண் தெய்வத்தை இழிவுபடுத்தும் வகையில் இருந்ததால் கடும் கண்டனங்கள் எழுந்தன. கனடா நாட்டின் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகமும், ‘காளி’ படத்தின் சர்ச்சை போஸ்டரை அகற்றுமாறு அந்நாட்டு அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அருங்காட்சியகத்தில் நடந்த போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில், காளி தேவியை இழிவாக காட்சிப்படுத்தியிருப்பது தெரியவந்தது. இந்து மற்றும் பிற மத சமூகங்களை அவமதித்தற்காக அருங்காட்சியகம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது’ என்று ெதரிவித்துள்ளது.

Tags : Lena ,Trinamool ,Congress , Lena's poster affair; Woman MP Controversial Comment on 'Kali': Trinamool Congress Sudden Explanation
× RELATED இன்று ஆஜராக மஹூவா மொய்த்ராவுக்கு ஈடி சம்மன்