8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: தி.மலை போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ சிறப்பு கோர்ட்  தீர்ப்பு அளித்தது. திருவண்ணாமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13.7.2019 அன்று மாலை வீட்டுக்கு வெளியே தெருவில் தனியாக விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த சுகந்தன் (19) என்பவர், சிறுமியை கட்டாயப்படுத்தி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுகந்தனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  இதுதொடர்பான வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் சுகந்தனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து, சுகந்தன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: