துரைப்பாக்கம், ஒக்கியம்பேட்டையில் ரூ257 கோடியில் பாதாள சாக்கடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம், ஒக்கியம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ257 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைவில் துவங்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துரைப்பாக்கம், எழில் நகரில் ரூ1.30 கோடி மதிப்பில் குடிநீர் வழங்கும் திட்டத்தை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்து பேசுகையில், ‘கடந்த அக்டோபர் மாதம் கண்ணகி நகர், எழில் நகர் பகுதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்தார்.

அப்போது எங்கள் பகுதிக்கு 6 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. எங்களுக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும் என எழில்நகர் பகுதி பெண்கள் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து, தற்போது ஓஎம்ஆர் பிரதான சாலையில் இருந்து எழில் நகர், சுனாமி குடியிருப்பை சேர்ந்த 8 ஆயிரம் வீடுகளுக்கு ரூ1.30 கோடி மதிப்பில் புதிதாக கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் ஒக்கியம்பேட்டை, நேரு நகர், மேட்டுக்குப்பம், துரைப்பாக்கம் ஆகிய 4 பகுதிகளில் ரூ256.91 கோடி மதிப்பில் புதிதாக பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்க உள்ளன’ என்றார்.

இதில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர்கள் மதியழகன், எஸ்.வி.ரவிச்சந்திரன், 195வது வார்டு உறுப்பினர் ஏகாம்பரம், குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: