×

குடந்தை அருகே பதுக்கி வைத்திருந்த உலோக சாமி சிலைகள், பாவை விளக்குகள் மீட்பு: 2 பேர் கைது

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாமி சிலையை 2 பேர் திருடி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மலைச்சாமி, டிஎஸ்பி கதிரவன் ஆகியோரின் அறிவுறுத்தல்படி, நேற்று முன்தினம் கும்பகோணம் அருகே பைபாஸ் சாலை ராம்நகர் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர். அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், கும்பகோணம் தாலுகா தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்த குருசேவ் (42), கொரநாட்டு கருப்பூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பவுன்ராஜ் (36) என்பதும், உலோக சாமி சிலைகள், பாவை விளக்குகளை திருடி மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் அங்கு சாலையின் ஒதுக்குபுறமாக மறைத்து வைத்திருந்த சாக்கு பைக்குள் வெள்ளை துணியில் 37 செ.மீ உயரம், 23 கிலோ எடையுடைய உலோகத்தினால் ஆன நாகலிங்கம் சிலை, 29 செ.மீ உயரம், 5 கிலோ எடையுடைய திருவாச்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை, மற்றும் 43.5 செ.மீ உயரம், 5 கிலோ எடையுடைய உலோகத்திலான இரு பாவை விளக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சிலைகளை ஏதேனும் கோயிலில் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசேவ், பவுன்ராஜ் ஆகியோரை நேற்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகப்பிரியா முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட உலோக சிலைகள் மற்றும் பாவை விளக்குகளை கும்பகோணம் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Pawai ,Kudanta , Rescue of metal Sami idols, Pawai lamps stashed near Kudanta: 2 arrested
× RELATED குடந்தையில் இருந்து சுற்றுலா...