8.4 கிலோ போலி நகை மோசடி: ஆரணி கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு: மாவட்ட இணைப்பதிவாளர் அதிரடி

ஆரணி: ஆரணியில் 8.4 கிலோ போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தது தொடர்பாக கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அண்ணா சிலை அருகே நகர கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு அதிமுகவை சேர்ந்த அசோக்குமார் என்பவர் தலைவராகவும், ஆனந்தன் என்பவர் துணைத்தலைவராகவும் இருந்தனர். இந்த வங்கியில் நகைக்கடன் மோசடி நடந்திருப்பதாக வந்த புகாரின்பேரில் சில மாதங்களுக்கு முன் வேலூர் மண்டல கூட்டுறவு சார்பதிவாளர் சாணக்கியன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 77 பேரின் கணக்குகளில் போலி மற்றும் தரக்குறைவான நகைகளை அடகு வைத்து கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதில் ரூ2.51 கோடிக்கு மோசடி நடந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக வங்கி மேலாண்மை இயக்குனராக இருந்த கல்யாணகுமார் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். வங்கி மேலாளர் லிங்கப்பன், காசாளர் ஜெகதீசன், உதவியாளர் சரவணன் ஆகிய 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் மோகனை டிஸ்மிஸ் செய்தனர். பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய கூட்டுறவு சங்க தலைவர் அசோக்குமார் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு அசோக்குமார், லிங்கப்பன், ஜெகதீசன், சரவணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வங்கியில் மொத்தம் 8.4 கிலோ ேபாலி நகைகளை அடகு வைத்து முறைகேடு செய்தது சில நாட்களுக்கு முன் அம்பலமானது. இந்நிலையில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான விவரங்கள் உறுதியானதால் நேற்று ஆரணி கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு கூண்டோடு கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை திருவண்ணாமலை மாவட்ட இணைப்பதிவாளர் நடராஜன் பிறப்பித்துள்ளார்.

Related Stories: