×

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விழிப்புணர்வு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு மற்றும் கையெழுத்து முகாம் நடத்தப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் சார்பில், தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியும், விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இன்று (06.07.2022) காலை, மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் சூரியன் ரேடியோ பண்பலை (Suriyan FM Radio) இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு முகாம் (Helmet Awareness Camp) நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், இருசக்கர வாகன விபத்துக்களில் ஏற்படும் பெரும்பாலான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படுவது குறித்தும், ஆகவே, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும்,

இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னிருக்கையில் அமர்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், அங்கு நடைபெற்ற கையெழுத்து முகாமில், தலைக்கவசம் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கையெழுத்திட்டனர். மேலும், காவல் ஆணையாளர் அவர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி, இலவசமாக தலைக்கவசங்கள் வழங்கினார். மேற்படி தலைக்கவசம் விழிப்புணர்வு முகாம் தொடர்ந்து 5 நாட்கள், 5 முக்கிய சிக்னல் சந்திப்புகளில் நடத்தப்படும் என காவல் ஆணையாளர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் குழுவினர் தலைக்கவசம் அணிவதை தீவிரபடுத்தும் விதமாக, கடந்த 23.05.2022 முதல் 05.07.2022 வரையில் சென்னை பெருநகரில் மேற்கொண்ட தீவிர வாகன சோதனையில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த 72,744 வாகன ஓட்டிகள் மீதும், பின்னிருக்கையில் தலைக்கவசம் அணியாமல் வந்த 63,912 நபர்கள் மீதும் என மொத்தம் 1,36,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூபாய் 1,36,65,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் திரு.கபில்குமார் சி. சராட்கர், இ.கா.ப., துணை ஆணையாளர் (போக்குவரத்து/கிழக்கு) திரு.குமார், சூரியன் ரேடியோ FM துணை தலைவர் திரு.சிவா, நிர்வாகிகள், பூர்விகா மொபைல்ஸ் தலைவர் திரு.சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Chennai ,Metropolitan Transport Guild , Helmets for Motorists: Chennai Metropolitan Traffic Police Awareness
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...