×

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 2 முதுமக்கள் தாழியில் முழுமையாக மனித எலும்புகள் கண்டுபிடிப்பு

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 2 முதுமக்கள் தாழியில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் முதற்கட்டமாக ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள், கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டது. கடந்த 8 மாத காலமாக நடந்து வரும் அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு முன்பு சங்க கால வாழ்விடப் பகுதி மற்றும் சங்க கால நாணயங்களும், கடந்த வாரம் 30 செமீ ஆழத்தில் தங்கத்தால் ஆன காதணியும் கிடைத்தது.

மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சுண்ணாம்பால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் அருகே தற்போது சுண்ணாம்பு மற்றும் செங்கலால் கட்டப்பட்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் 3200 ஆண்டுகள் பழமையான இரு முதுமக்கள் தாழியில் இருந்து மனிதனின் அனைத்து எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு எலும்புகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியில் தலை, தாடை, பல், கை, கால், முதுகு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து எடுக்கப்பட்ட பற்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Adhichanallur excavation work 2 Fully Human Bones Discovered in Ancient Tombs
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு