×

நெல்லை மாவட்ட கோயில்களில் வேடந்தாங்கலாக மாறும் நந்தவனங்கள்: இயல் மரங்களில் இளைப்பாரும் பறவைகள்

நெல்லை:   தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 48 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் பழமைவாய்ந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்கள் ஏராளம். இவற்றில் 558 பெரிய கோயில்களும் அடங்கும். சிறப்புமிக்க இக்கோயில்களில் தினமும் நித்ய பூஜைகள் நடைபெறவும், தங்குதடையின்றி குறிப்பிட்ட காலத்தில் திருவிழாக்கள் நடத்தப்படவும் மன்னர்கள், செல்வந்தர்கள் உள்ளிட்ட முன்னோர்கள் பல்லாயிரம் ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் மற்றும் ரூ. பல கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்களை தானமாக வழங்கி உள்ளனர். இத்தகவல் கோயில்களில் உள்ள கல்வெட்டுகளாலும், செப்பு பட்டயங்களாலும் அறியப்பட்டுள்ளது. இதேபோல் கோயில்களில் உள்ள இறைவனுக்கு நித்ய பூஜைகளுக்கு தேவையான பூக்கள், பழங்கள், இயல் மரங்கள் ஆகியவைகளை வளர்த்து நந்தவனங்களை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். இத்தகைய நந்தவனங்கள் அரிய வகை மரங்கள், பூ செடிகள், மருத்துவ குணமுடைய மரங்கள், பழ மரங்கள் வைத்து வளர்க்கப்படுவதால் மரங்களில் உள்ள பழங்களை உணவாக உட்கொள்ளும் பறவைகள் அன்றி பிழைக்கும் வேடந்தாங்கலாக ஒவ்வொரு கோயிலிலும் உள்ள நந்தவனங்கள் மாற்றம் கண்டுள்ளது.

கோயில் நந்தவனம் என்பது மரங்களையும், அவற்றையே நம்பி வாழும் பல்லுயிர்களை பாதுகாப்பதற்காகவும் நம்முன்னோர்கள் வகுத்த அறவழியாகும். நந்தவனங்கள் கோயில்களுக்கு பசுமை வேலியாகவும் இயல் தாவரங்களின் பாதுகாப்பு களஞ்சியமாகவும் அமைந்துள்ளன. பல அரிய மரங்களின் விதைகள் கோயில் நந்தவனங்களில் மட்டுமே கிடைக்கும். நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி பாயும் நதிக்கரையில் பல நூற்றாண்டுகளை கடந்த பழமையான கோயில்கள், அதன் நந்தவனங்களும் உள்ளன. இத்தகைய கோயில்களில் உள்ள நந்தவன காடுகளில் நீர் வாழ் பறவைகள் கூடுகள் கட்டி கொஞ்சி விளையாடுவதை கோயிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசிப்பதை பல கோயில்களில் தற்போது அதிக அளவில் காணமுடிகிறது.  கடந்த அதிமுக ஆட்சியில் இத்தகைய கோயில் நந்தவனங்கள் அனைத்தும், கேட்பாரற்று கிடந்தன.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவியேற்ற சேகர்பாபு, கோயில்களில் உள்ள நந்தவனங்களை இயற்கை எழில் சூழ்ந்த சோலைவனமாக்கும் வகையில் பராமரித்து பாதுகாக்க தக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் அகஸ்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம் மூலம் நெல்லை மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட பழமையான 131 கோயில்களில் உள்ள நந்தவனங்கள், கோயிலை சுற்றி வளர்க்கப்படும் மரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இப்பணியில் நெல்லை நீர்வளம் அமைப்பை சேர்ந்தவர்கள் மூலம் மரங்கள், அவைகளில் வாழும் பறவையினங்கள், பல்லுயிர் பெருக்கம் குறித்த கணக்கெடுக்கும் பணியும் நடந்தது. கோயில் நந்தவனங்களில் வளர்ந்துள்ள மரம், அதன் புவியியல் குறியீடு, மரத்தின் பெயர், அதன் பயன்பாடு, என்னென்ன பறவைகள் கூடுகட்டி குடியிருக்கின்றன? பல்லுயிர் பெருக்கத்திற்கு அவற்றின் பங்கு யாது? என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரித்தனர்.

இதில் கோயில் நந்தவனங்களில் 97 வகையான சிறிய இயல் இனங்களை சார்ந்த சுமார் 3,664 மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 941 வேப்ப மரங்களும், 512 தென்னை மரங்களும், 307 வில்வ மரங்களும், 196 தேக்கு மரங்களும், 120 மா மரங்களும், 102 அரசு மரங்களும், 102 நீர் மருதமரங்களும், இலுப்பை, புங்கை, நெல்லி, புளி, ஆலமரம், நாவல் உள்ளிட்ட 50க்கும் அதிகமான மரங்களும் இடம்பெற்றது தெரியவந்துள்ளது. குறிப்பாக திசையன்விளை அருகே உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் 26 சிறிய இனங்களைச் சார்ந்த  318 மரங்களும், நெல்லையப்பர் கோயிலில் 30 சிறிய இனங்களைச் சார்ந்த 294 மரங்களும், திருப்புடை மருதூர் நாறும்பூநாதர் கோயிலில் 27 சிறிய இனமரங்களைச் சார்ந்த 290 மரங்களும், முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலில் 24 சிறிய இனங்களைச் சார்ந்த 210 மரங்களும் நந்தவனங்கள் மற்றும் கோயிலைச் சுற்றி காணப்படுகின்றன.

 இதனிடையே தாமிரசபை நாயகன் எனப் போற்றப்படும் ராஜவல்லிபுரம் செப்பறை கோயில் வளாகம் மற்றும் சீவலப்பேரி சுடலை கோயில் பகுதிகளில் மட்டும் 5,600 பனை மரங்கள் உள்ளன.  இவை கோயில் காடுகள் எனப் பக்தர்களால் அழைக்கப்படுகின்றன. இம்மரங்களில் மைனா, கிளி உள்ளிட்ட பறவைகள் கூடுகள் கட்டி தங்கி வாழுவது தெரியவந்துள்ளது.  இதே போல் நெல்லை மாநகருக்கு திக்கெட்டும் புகழ் சேர்க்கும் நெல்லையப்பர் கோயிலில் 100 ஆண்டுகளை கடந்த பழமையான உலக்கை பாலை மரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய மரம் நெல்லை மாவட்டத்தில் உள்ள வேறுஎந்த கோயில்களிலும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். வள்ளியூர், ராதாபுரம் பகுதிகளில் உள்ள கோயில்களில் நூறு ஆண்டுகளை கடந்த 3 கடம்ப மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


Tags : Nandavanas ,Nellai district , Nellai district temples Nandavanas that turn into vedangala: birds resting in the trees
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...