×

பக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கள்ளக்குறிச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வாரசந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆடுகள் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். சென்னை, திருச்சி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த 100-க்கணக்கான இஸ்லாமியர்கள் காலை முதலே சந்தையில் ஆடுகள் வாங்க ஆர்வம் காட்டினர். ஆடுகள் அவற்றின் எடைக்கேற்ற படி ரூ.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போயின.

வாரச்சந்தை தொடங்கி சிலமணி நேரத்திலேயே ரூ.3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையாகின. இதேபோல திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்ற கால்நடை சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நாட்டு ஆடு, குரும்பை ஆடு ஆகியவற்றை ஆர்வத்துடன் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். ஆந்திராவில் இருந்து விற்பனைக்கு ஆடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளது. வழக்கமான விலையை விட ரூ.4 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விலை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கால்நடை சந்தை தொடங்கி சுமார் 4 மணி நேரத்திலேயே ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். விலை உயர்ந்த போதிலும் வியாபாரிகள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.


Tags : Ulundurpet ,Bakrit festival , Pakreet, Ulundurpet, weekly market, goat, sale
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...