அடிப்படை வசதியில்லாத தகர கொட்டகையில் இயங்கும் அவலம் இடிந்து விழும் நிலையில் வியாசர்பாடி காவல் நிலையம்: தினம் தினம் செத்துப் பிழைக்கும் போலீசார்

பெரம்பூர்: சென்னையில் பழமையான காவல் நிலையங்களில் வியாசர்பாடி காவல் நிலையமும் ஒன்று. அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதி என்பதால், இந்த காவல் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த காவல் நிலைய கட்டிடம் சிதலமடைந்த காரணத்தினால், வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் 1989ம் ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதன் பிறகு 14 ஆண்டுகள் ஆன பின்பு சிறிது சிறிதாக சிதலமடைந்து அந்த காவல் நிலைய கட்டிடமும் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதானது.

இதனையடுத்து, 2003ம் ஆண்டு இந்த காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள எஸ்ஐ கோட்ரஸ் பகுதிக்கு தற்காலிகமாக காவல் நிலையம் மாற்றப்பட்டது. அங்கு போதுமான இட வசதிகள் இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக சுவர், தகர மேற்கூரையுடன் காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அதன் எதிரில் இருந்த காவலர் குடியிருப்புகள் சிதலமடைந்து அங்கிருந்து காவலர்கள் அனைவரும் காலி செய்தனர்.

தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் வியாசர்பாடி குற்றப்பிரிவும், வியாசர்பாடி போக்குவரத்து துறையும் இயங்கி வருகிறது. சட்டம் ஒழங்கு காவல் நிலையம் அதே தகர கூரை நடுவே இயங்கி வருகிறது. பழைய காவல் நிலையம் இருந்த இடத்தில் காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு நடுவே 9 கிரவுண்ட் உள்ள அந்த இடத்தை 1973ம் ஆண்டே குடிசை மாற்று வாரியத்திடமிருந்து காவல்துறை வாங்கியது. அதற்கான ஆவணங்கள் காப்பகத்தில் தற்போதும் உள்ளது.

2003ம் ஆண்டு காவல் நிலைய கட்டிடம் சேதமடைந்த போது, அதனை மீண்டும் கட்டும் பணியில் இறங்கிய போது, அப்பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் வருவதாகவும், அதற்கு வியாசர்பாடி காவல் நிலையம் இருந்த இடத்தில் 3 கிரவுண்ட் இடம் தேவைப்படுவதாகவும் நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு வியாசர்பாடி காவல் நிலையம் இருந்த பழைய இடத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு 3 கிரவுண்ட் இடம் ஒதுக்கப்பட்டது.

மீதமுள்ள 6 கிரவுண்ட் இடத்தில் வியாசர்பாடி காவல் நிலையம் கட்டும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், ஏதாவது ஒரு தடை வந்து காவல் நிலைய கட்டிடத்தை கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் காவல் நிலையம் இருந்த இடம் மற்றும் காவலர் குடியிருப்பு இருந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வியாசர்பாடி காவல் நிலையம் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு சமீபத்தில் மனு அளிக்கப்பட்டது.

 ஆனால் காவலர்கள் குடியிருப்பு தற்போது கட்ட முடியாது எனவும், காவல் நிலையம் மட்டும் கட்டுவதற்கான மனுவை தாக்கல் செய்யும்படியும் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த எழுத்துப் பூர்வமான ஆவணமும் இதுவரை காவல் நிலையத்தில் உரியவர் கைக்கு வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இவ்வாறு அந்த மனு வந்து சேரும் பட்சத்தில் மீண்டும் வியாசர்பாடி காவல் துறையினர் காவல் நிலையம் மட்டும் கட்டுவதற்கு மனு அளிக்க வேண்டும். அந்த மனு பல்வேறு அதிகாரிகளை தாண்டி உயர் அதிகாரிகளுக்கு சென்று, அவர்கள் ஒப்புதல் வழங்கி அதன் பின்பு தற்போது உள்ள இடத்திலிருந்து தற்காலிகமாக வேறு இடத்திற்கு காவல் நிலையத்தை மாற்றி மீண்டும் கட்டுமான பணிகள் தொடங்கப்படும், என்ற நிலை உள்ளது.

இந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காவல் நிலைய மேற்கூரையிலிருந்து மின்விசிறி கீழே விழுந்தது. அதிஷ்டவசமாக யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் வரும் இன்ஸ்பெக்டர்கள் இந்த காவல் நிலையம் இருக்கும் சூழ்நிலையை பார்த்து எப்போது இந்த காவல் நிலையத்தை விட்டு செல்வோம் என்ற ஒரு மன இறுக்கத்துடனே வேலை பார்த்து வருகின்றனர்.

 அதனையும் மீறி சில காவலர்கள் காவல் நிலையத்தை கட்டும் முயற்சியில் ஈடுபட்டாலும், அதற்கு உயர் அதிகாரிகள் உரிய அனுமதி தராமல் கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்துள்ள அவலம் தான் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சுறுத்தும் குற்றப்பிரிவு

சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தின் எதிரே உள்ள பழைய காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவல் மற்றும் குற்றப்பிரிவு இயங்கி  வருகிறது. சிதிலமடைந்த இந்த கட்டிடத்தின் உடைந்த படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றால் பால்கனி எப்போது  இடிந்து விழும் என்ற நிலையில்தான் உள்ளது. இதனால் பெரும்பாலானோர் படி ஏறி  செல்வதே கிடையாது. இந்த கட்டிடத்தில் பணிக்கு செல்லும் காவலர்கள் ஒருவித உயிர் பயத்தோடு  பணிபுரிந்து வருகின்றனர். புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் இங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.

பெண் போலீசார் தவிப்பு

தற்போது சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் உள்ள இடம் மிகவும் குறுகலாகவும், இட  பற்றாகுறையுடனும் உள்ளது. மேலும் காவல் நிலையத்தை சுற்றிலும் திருட்டு  வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை அழைத்து வந்து விசாரணை செய்வதற்கும்  போதுமான இடவசதி இல்லை. இதனால் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளிடம்  விசாரணை  மேற்கொள்வதற்காக வியாசர்பாடி காவல் நிலையத்தில் இருந்து எம்கேபி நகர் காவல்  நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  மேலும், பெண் காவலர்கள் உடை மாற்றவும் போதுமான இட வசதி இல்லை.

Related Stories: