×

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு 2.677 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது: நீர் வளத்துறை தகவல்

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் அளவு குறைந்தது. இதுவரை,  2.677  டிஎம்சி கிடைத்துள்ளது  என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி, ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி  தண்ணீர் வழங்க வேண்டும். இதில், தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.  மேலும், இந்த வருடம் ஜனவரி மாதம் தமிழகத்திற்கு தண்ணீர் ஆந்திர அரசு வழங்காத நிலையில், தமிழக  அரசின் கோரிக்கை ஏற்று அதனை  தொடர்ந்து ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் திறக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு கடந்த மே மாதம் 5  தேதி காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டது.  பின்னர், படிப்படியாக உயர்த்தி 1500 கன அடியாகவும், பின்னர்  2 ஆயிரம் கன அடியாகவும் தண்ணீர்  திறந்து  விடப்பட்டது.பின்னர், இந்த தண்ணீர்  தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை  8ந் தேதி வந்தடைந்தது.  இதனை தொடர்ந்து, 9 தேதி பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு சென்றடைந்தது.  மேலும்,  தற்போது கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 1300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  இதில், 1000 கன அடி  ஆந்திர விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு எடுத்துக்கொண்டதுபோக, மீதமுள்ள 300 கன அடி மட்டுமே தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

கடந்த மே மாதம் 5 தேதி திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த  27 தேதி வரை என  51  நாட்களில் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. தற்போது செம்பரம்பாக்கம்,  சோழவரம் ஏரிகளில்  90 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது.  பூண்டி ஏரிக்கு மட்டும் தற்போது கிருஷ்ணா தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.  தற்போது வரை  2.677 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Kandaleru Dam ,Water Resources Department , Kandaleru Dam, Tamil Nadu, Department of Water Resources
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...