×

பண மோசடி வழக்கு விவோ நிறுவனத்தின் 44 இடங்களில் ரெய்டு: அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி: பண மோசடி வழக்கு தொடர்பாக விவோ, அதன் தொடர்புடைய நிறுவனங்களின் 44 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது. சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனங்களான விவோ, ஷாவ்மி, ஓப்போ உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள், அவற்றின் விநியோகஸ்தர்கள் மற்றும் கூட்டாளிகளின் தொடர்புடைய 20 இடங்களில் கடந்த டிசம்பர்  மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, ரூ.6,500 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், ஷாவ்மி நிறுவனத்திடம் சட்ட விரோத பரிவர்த்தனைகள் தொடர்பாக ரூ.5,551.27 கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியது.  

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள விநியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக சமீபத்தில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அந்த நிறுவனத்தில் சில சீன பங்குதாரர்கள் தங்கள்  அடையாள ஆவணங்களை போலியாக தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டதால், பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், பண மோசடி தொடர்பாக டெல்லி, உத்தரபிரதேசம், மேகாலயா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாடு முழுவதும் விவோ மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் 44 இடங்களில் அமலாக்கத்துறை நேற்று அதிரடி சோதனை நடத்தியது.


Tags : Vivo , Money fraud case Raid 44 places of Vivo company: Enforcement department in action
× RELATED விவோ நிறுவனம் மீது நடவடிக்கை இந்தியாவை மிரட்டும் சீனா