பணப் பரிமாற்ற மோசடி வழக்கு சமாஜ்வாடி எம்எல்ஏவின் மனைவி, மகனுக்கு சம்மன்: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: பண மோசடி வழக்கில் சமாஜ்வாடி மூத்த கட்சித் தலைவர் அசம்கானின் மனைவி, மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் எம்எல்ஏ அசம்கான் (73) உத்தரபிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அவர் நடத்தும் ஒரு பல்கலைக் கழகம் ஒரு நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் மீது பண பரிமாற்ற மோசடி உள்ளிட்ட 26 வழக்குகளை மாநில காவல்துறை பதிவு செய்தது.

இதை கவனத்தில் கொண்டு 2019ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அசம்கான், சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து 27 மாதங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அசம் கானின் மனைவி தசீன் பாத்மா அவரது மகனும், ஸ்வார் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்லா ஆசம் கான் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இருவரும் இந்த வாரம் லக்னோவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தனித்தனியாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அசம்கானின் குடும்பத்துக்கே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: