×

நுபுர் சர்மா வழக்கில் காட்டமான கருத்து உச்ச நீதிமன்றம் எல்லை மீறி விட்டது: 117 முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ்கள் கண்டனம்

புதுடெல்லி: ‘நுபுர் சர்மா விவகாரத்தில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் எல்லை மீறி விட்டது,’ என 117 முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜ முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீதான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கடும் கண்டனம் தெரிவித்தது.

‘நுபுர் சர்மாவின் முன்யோசனை இல்லாத பேச்சு நாட்டையே தீக்கிரையாக்கி விட்டது.  இந்த விவகாரத்தில் அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்,’ என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கண்டித்தனர். நீதிபதிகளின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் வலதுசாரி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கிஷிதிஜ் வியாஸ், குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சோனி உள்ளிட்ட 15 நீதிபதிகள், 77 ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 25 ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசியலமைப்பு சட்டப்படி அனை த்து அமைப்புகளும் முறையாக செயல்படும் வரையிலும் ஜனநாயகத்திற்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால், நுபுர் சர்மா விவகாரத்தில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தனது லட்சுமண கோட்டை தாண்டி விட்டது. நீதித்துறை வரலாற்றில் இதுபோன்ற துரதிருஷ்டவசமான கருத்துக்களுக்கு இணையாக வேறெதுவும் இல்லை. இது மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதி அமைப்பில் அழியாத வடுவை ஏற்படுத்தி உள்ளது. இத்தககைய மூர்க்கத்தனமான கருத்துக்களை நீதித்துறையின் உரிமை மற்றும் நேர்மையை காரணம் காட்டி புனிதப்படுத்திவிட முடியாது. கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த விஷயத்தில் அவசரமான சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

அவமதிப்பு வழக்கு தொடர கோரிக்கை
உச்ச நீதிமன்ற கருத்தை விமர்சித்த நபர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘நீதிபதிகளின் கருத்துகளை தனிப்பட்ட  முறையில் விமர்சனம் செய்வது தவறாகும். எனவே, நீதித்துறைக்கும்,  நீதிபதிகளுக்கும் எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளார்.

Tags : Supreme Court ,Nupur Sharma ,IASs , Nubur Sharma Case, Gatmana Opinion, Supreme Court, Former Judges
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...