×

ரூ.1.50 லட்சம் மதிப்பிலான வைரம் பதித்த பேனா திருட்டு: விஜய் வசந்த் எம்பி, போலீசில் பரபரப்பு புகார்

சென்னை: தனது தந்தையின் நினைவாக வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க பேனா திருடுபோனதாக கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கிண்டி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கன்னியாகுமரி எம்பியும், தொழிலதிபருமான விஜய்வசந்த். தனது தந்தை வசந்த் குமார் வைத்திருந்த வைரக்கல் பதித்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள தங்க பேனாவை பயன்படுத்தி வந்தார். தந்தை இறப்புக்கு பிறகு அவரது நினைவாக, அந்த தங்க பேனாவை விஜய் வசந்த் வைத்திருந்தார்.

இந்நிலையில், எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தமிழகத்தில் ஆதரவு கேட்டு கடந்த 30ம் தேதி சென்னை வந்தார். அவரை காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிண்டியில் உள்ள 7 நட்சத்திர ஓட்டலில் சந்தித்து ஆதரவு அளித்தனர். விஜய் வசந்த் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் யஷ்வந்த் சின்காவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் விஜய் வசந்துக்கும் அவரது ஆதரவாளர்கள் சால்வைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த பார்த்தபோது, விஜய் வசந்த் தனது சட்டையில் வைத்திருந்த தங்க பேனா மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனே நிகழ்ச்சி நடந்த கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு விரைந்து சென்று ஓட்டல் மேலாளர்களிடம் புகார் அளித்தார். அதன்படி நிகழ்ச்சி நடந்த அரங்கம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் அவரது பேனா கிடைக்கவில்லை. மேலும், நிகழ்ச்சி நடந்த அரங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் பெற்று ஓட்டல் நிர்வாகம் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தந்தை வசந்த்குமார் பயன்படுத்திய பேனாவை தொலைத்துவிட்டோம் என்று கடும் மன உளைச்சலில் வீட்டில் உள்ளவர்களிடமும் சரியாக பேசாமல் வேதனையில் இருந்து வந்துள்ளார். பிறகு, விஜய்வசந்த் கிண்டி காவல் நிலையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள வைரக்கல் பதித்த தங்க பேனா திருடுபோனதாக புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன தங்க பேனாவுக்கும் விஜய்வசந்த் இன்சூரன்ஸ் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரின் தங்க பேனா திருடுபோன சம்பவம் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vijay Vasant , Diamond-studded pen theft, Vijay Vasant MP, Complain to the police
× RELATED இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு காங். வேட்பாளர் விஜய் வசந்திற்கு ஆதரவு