×

ஆந்திராவுக்கு மினிவேனில் கடத்திய 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

திருவள்ளூர்: மீஞ்சூர் பைபாஸ் சாலை வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். மீஞ்சூர் பைபாஸ் சாலை வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று மீஞ்சூர் பைபாஸ் சாலையில் காவல் ஆய்வாளர்  சுந்தரம்பாள் தலைமையில் தலைமை காவலர்கள் திருப்பதி, சுந்தரபாண்டியன், செந்தில்குமார், டேவிட் சந்தானம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் ஏழை, எளிய மக்களுக்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக 3 டன் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மைக்கேல்(64) மற்றும் லோகநாதன்(54) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் மீஞ்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதும் தெரியவந்தது. தொடர்ந்து மைக்கேல் மற்றும் லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மற்றும் மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்த மினிவேனை திருவள்ளூர் அலுவலகத்தில் ஒப்படைத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : minivan ,Andhra Pradesh , 3 tons of ration rice smuggled in minivan to Andhra Pradesh seized: 2 arrested
× RELATED கொளுத்தும் வெயிலுக்கு மரம்...