×

418 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் கோலாகல ஏற்பாடுகள்; பக்தர்கள் குவிந்தனர்

குலசேகரம்: திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பின் நாளை காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும்.  பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சுமார் 418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை(6ம் ேததி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான பூஜைகள் கடந்த 29ம் தேதி முதல் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள், நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
விழாவின் 7ம் நாளான இன்று காலை கணபதி ஹோமம், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், ஸ்ரீமத் பாகவத பாராயணம், மதியம் அன்னதானம் ஆகியன நடைபெற்றது.

மாலையில் சக்ராப்ஜம், தியானதிவாசம், கோதோஹனம், பரிஹோமம், அத்தாழ பூஜை ஆகியவை நடக்கின்றன. பின்னர் ஆதிகேசவ பெருமாள் மகிமை தொடர்பாக, வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா சொற்பொழிவாற்றுகிறார். இரவு 7 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. நாளை (6ம்தேதி) அதிகாலை 3.30 க்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சுப முகூர்த்தத்தில் பிரதிஷ்டை, உபதேவன்மார்களுக்கு பிரதிஷ்டை உள்ளிட்டவை நடக்கின்றன. காலை 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம் ஆகியவை நடக்கின்றன. காலை 6 மணி முதல் 6.50க்குள் அஷ்ப பந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை  முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், விஜய் வசந்த் எம்.பி., கலெக்டர் அரவிந்த், எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பகவதி சேவை, சோபானத்தில் பத்மமிட்டு அத்தாழ பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு  லட்சதீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மறுதினம் (7ம்தேதி) காலை 6 மணிக்கு அபிஷேகம், மாலை 5 மணிக்கு ஹோமகுண்ட சுத்தி, வாஹன பரிக்கிரகம், ஜலாதிவாசம் ஆகியவை  நடக்கின்றன.

இரவு 7 மணிக்கு மோகினியாட்டம் நடைபெறுகிறது. 8ம் தேதி  காலை 6 மணிக்கு அபிஷேகமுமு், மாலை 5 மணிக்கு மண்டல பூஜை, தியானாதிவாசம் ஆகியவை நடக்கின்றன. கொடிமரத்துக்கு ஸ்தல சுத்தி உள்ளிட்டவை நடக்கின்றன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்கு புதிய கொடிமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடப்பட்டது. அதில் தங்க மூலம் பூசப்பட்ட கவசங்கங்கள் நேற்று பொருத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி நாளை அதிகாலை 3.30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளை அதிகாலையில் இருந்து சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரை கோயிலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேக பாதுகாப்பு பணிகளில் 1200 போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபடுகிறார்கள். இன்று காலை முதல் கோயிலில் போலீசார்குவிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி பக்தர்களை பாதுகாப்பான தரிசனத்திற்கு அனுப்பும் எல்லா ஏற்பாடுகளையும் காவல் துறை, அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்பி ஹரி கிரண்பிரசாத் ஆகியோர் பார்வையிட்டனர். இன்று காலை முதலே கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். காலையில் நடைபெற்ற பூஜையில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி  இருந்தது.

Tags : Tiruvattar Adhikesava Perumal Temple ,Kumbaphishekam ,Arrangements , Taking place after 418 years, kumbabhishekam kolagala arrangements at Tiruvattar Adhikesava Perumal temple tomorrow; Devotees flocked
× RELATED ஹாலிவுட் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீர் விலகல்