×

நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டுபிடிப்பு

நெல்லை : நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நெல்லை அருகே முன்னீர்பள்ளம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். மேல முன்னீர்பள்ளம், கீழ முன்னீர்பள்ளம் என இரு பாகங்களாக காணப்படும் இவ்வூரில் வரலாற்று சான்றுகள் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. முன்னீர்பள்ளம் ஊரின் கீழ் எல்கையான செல்வி அம்மன் கோயில் அக்காலத்தில் வீரபாண்டியன் செல்வியம்மன் கோயில் என அழைக்கப்பட்டது. அதாவது வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னரின் மகளான செல்வியின் பெயரில் உருவான கோயில் என இக்கோயில் குறிப்பிடப்படுகிறது.

 முன்னீர்பள்ளம் வட்டாரத்தில் பூதலவீரர் என்னும் மன்னரின் உருவம் பொறித்த செப்புக்காசுகளும் ஏற்கனவே கிடைத்தன. அவை வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வில் உள்ளது. இந்நிலையில் முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுகள் பழமையான ஒரு செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த செப்பேட்டில் 123 வரிகள் உள்ளன. அதில் முதல் 106 வரிகளில் வாசகங்கள் உள்ளன. 107 முதல் 114 வரை வடமொழி இலக்கணம் காணப்படுகிறது. அதன் பின்னர் 115 முதல் 123 வரையிலான வரிகளில் அந்தணர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது கிடைத்துள்ள செப்பேடு மூலம் அந்தக்கால சூழல்களை அறியலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருநெல்வேலி வரலாற்று பண்பாடு கள ஆய்வு மைய இயக்குனர்  மாரியப்பன் இசக்கி கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் ஊரானது முன்பு ஜெயசிம்ம நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதை சுற்றியுள்ள கிராமங்களை சங்கரன் நாராயணன் என்பவர் ஆண்டு வந்தார். இப்பகுதிகளை பூதல வீர உண்ணிக் கேரள வர்மன் வென்றான். இந்தப் போர் சகாப்தம் ஆண்டு 1466- ஆம் ஆண்டு. கொல்லம் ஆண்டு 720 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது (அதாவது கிபி 1544 ஆம் ஆண்டு). இதுதொடர்பான செப்பேடு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. கல்வெட்டு தமிழ் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.

 இதில் முன்னீர்பள்ளம் ஊரை ‘கீழ்க்கள கூற்றத்து  வல்லபன்மங்கலத்தின் மேல் பிடாகை முன்னீர்பள்ளம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த ஊர் 90 பங்குகளாக பிரிக்கப்பட்டு பிரம்ம தேயமாக அந்தணர்களுக்கு தானம் கொடுக்கப்பட்டதை செப்பேடு குறிப்பிடுகிறது. மேலும் ஊரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கும், பெருங்கருணை ஈஸ்வரமுடையார் கோவிலுக்கும் பங்கும், மனையும் கொடுக்கப்பட்டன. கூடவே வேதவிருத்தி, புராண விருத்தி ஆகியவற்றிக்கும்  பங்குகளும், மனைகளும் அளிக்கப்பட்டுள்ளன.  

இதில் நெல்லை வட்டாரம் அடங்கிய பெரும்பகுதி கீழ்க்களக்கூற்றம்  என்றும், பாளையங்கோட்டை வல்லபன் மங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. இதற்கு மேற்புறத்தில் அமைந்துள்ள ஊர் முன்னீர்பள்ளம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பூதல வீரனின் கல்வெட்டுக்கள் அம்பாசமுத்திரம், களக்காடு, பாளையங்கோட்டை பகுதிகளில் காணப்படுகிறது. செப்பேட்டின் அனைத்து பகுதிகளும் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் 90 பெயர்கள் முழுமையாக கிடைக்கப்படவில்லை. தற்பொழுது செப்பேடு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வசம்  உள்ளது. செப்பேடு குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.’’ என்றார்.

Tags : Paderpallam ,Paddy , Nellai: A 480-year-old copper was found in Munneerpallam near Nellai.Near Nellai
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...