மாநகர பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் கவனம் தேவை: எம்டிசி நிர்வாகம் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: மாநகர பஸ் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது எச்சிலை தொட்டு வழங்கக்கூடாது என எம்டிசி நிர்வாகம் அனைத்து நடத்துனர்களையும் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, எம்டிசி நிர்வாகம் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துனர் பயணச்சீட்டு வழங்கும்போது பயணச்சீட்டு கட்டிலிருந்து பயணச்சீட்டை எடுக்கும்போதும் பயணச்சீட்டுகள் ஒன்றொடு ஒன்று சேர்ந்து இருப்பதால் பிரித்து எடுக்க ஒரு சில நடத்துனர்கள் எச்சில் தொட்டு பயணச்சீட்டுகளை எடுத்து பயணிகளுக்கு கொடுப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் பயணிகள் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொழுது மிகுந்த மன உளைச்சலுடன் பெற்றுக்கொள்கின்றனர்.

எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவது சுகாதார கேடு விளைவிக்கும் என்பதால் முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. எனவே, இனிவரும் காலங்களில் நடத்துனர்கள் பேருந்தில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் பொழுது தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி பயணச்சீட்டு வழங்க வேண்டும்.  எனவே அனைத்து நடத்துனர்களுக்கும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதை முற்றிலும் தவிர்க்க தக்க அறிவுரைகள் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கவும், தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை ஏற்பாடு செய்து நடத்துனர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: