செய்யூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித தோமையார் திருநாள் திருப்பலி நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு

செய்யூர்: செய்யூரில் புனித  அந்தோணியார் ஆலயத்தில், புனித தோமையார் திருநாள் திருப்பலி  நடைப்பெற்றது. இதில், ஏராளமான கிறித்தவர்கள் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு செய்யூரில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இங்கு, இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையாரின் பாத பதிவுகள், முழங்கால் தடம் மற்றும் கைவிரல் பதிவுகள் கொண்டுள்ள ஜெபத்தோட்ட பூங்கா அமைந்துள்ளது. சமீபத்தில், இந்த பூங்கா புனரமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா மற்றும் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

மேலும், புனிததோமையாரின் பதிவுகளை ஆவணப்படுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இவ்விழாவில், அருட்பணி பங்குத்தந்தை ஆன்றனி ஸ்டார்லின் வரவேற்றார். அருட்பணி பெஞ்சமின் நேசமணி சிறப்புரையாற்றினார். இதில்,  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினராக செய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் லோகாம்பிகைராஜமாணிக்கம்  கலந்து கொண்டார். அப்போது அவர், ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி  வளர்ந்து வரும் சுற்றுலா தலம் மற்றும் கிறிஸ்தவர்களின் ஆன்மீக பூமியாக இவ்விடம் ஆவணப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

இவ்விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க. ஆதவன், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின்  யூனியன் தேசிய செயலாளர்  ஜார்ஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.   விழா ஏற்பாடுகளை  திருச்சபை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் செய்திருந்தார்.

Related Stories: