×

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய தாய், மகள் கைது: பரபரப்பு வாக்குமூலம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் பெண் குழந்தையை கடத்திய தாய், மகள் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன்நகரை சேர்ந்த யூனிஸ் (28) மனைவி திவ்யபாரதிக்கு (25) கடந்த 29ம் தேதி பொள்ளாச்சியில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 3ம் தேதி அதிகாலையில் தாயின் அருகில் தூங்கிய குழந்தையை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்படி போலீசார் 12 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு ஆட்டோவில் பெண்ணும், சிறுமியும் கட்டைப்பையில் குழந்தையை கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த பெண்கள் சென்ற ஆட்டோ குறித்து பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நகரில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர், 2 பெண்களை பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார். அவர் சொன்ன தகவலையடுத்து, பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா சோதனையிடப்பட்டது. அதில் இரு பெண்களில் ஒருவர் கட்டைப்பையுடன் கோவை செல்லும் பஸ்சில் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து கோவை ரயில் நிலையத்தில் உள்ள கேமரா ஆராயப்பட்டது. அப்போது அந்த பெண் கையில் குழந்தையுடன் பாலக்காடு ரயிலில் ஏறி சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கோவை எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில், குழந்தையை கடத்தி சென்றவர் ஜெபீனா (35), கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொடுவாயூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று குழந்தையுடன் இருந்த ஜெபீனாவை பிடித்து விசாரித்தனர். கடத்தலுக்கு உதவியதாக அவரது மகளான 15 வயது சிறுமியையும் போலீசார் பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர். இருவரையும் கைது செய்து பொள்ளாச்சி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஜெமீனா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமி கோவையில் உள்ள சிறார் காப்பகத்தில் சேர்த்தனர். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை கையில் வாங்கிய பெற்றோர் ஆனந்த கண்ணீர் விட்டு போலீசாருக்கும், உறுதுணையாக இருந்தவர்களுக்கும்  நன்றி தெரிவித்தனர். அரசு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டு, 22 மணி  நேரத்தில் மீட்கப்பட்டதால் போலீசாரை அனைவரும்  பாராட்டினர். கைதான ஜெமீனா அளித்த வாக்குமூலம்:  கேரள மாநிலம் கல்பாத்தியை சேர்ந்த ஹக்கீம்  என்பவருக்கும், எனக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 3 குழந்தை பிறந்தது.

5ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக, ஹக்கீமை விட்டு பிரிந்து, குழந்தைகளுடன்  வாழ்ந்து வந்தேன். அப்போது, எனக்கும் கொடுவாயூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவரும் நானும் கணவர், மனைவியாக வாழ்ந்து வந்தோம். மணிகண்டன் தனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டார். எனது வயிற்றில் கட்டி இருந்ததால் கர்ப்பமாக இருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். அவரும் மகிழ்ச்சியுடன் வெளியூருக்கு வேலைக்கு சென்றார்.

அவர் திரும்பி வருவதற்குள் குழந்தையை எங்காவது கடத்தி வரலாம் என்று எண்ணி, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர், ஈரோடு, கோவை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கடந்த ஒரு மாதமாக சென்று கண்காணித்தேன். அதன்படி பொள்ளாச்சி மருத்துவமனையில் 3ம் தேதி அதிகாலை சுமார் 2 மணியளவில், எனது 15 வயது மூத்த மகளை அழைத்து சென்று பச்சிளம் குழந்தையை எடுத்து கட்டப்பையில் வைத்துக்கொண்டு சென்றேன். குழந்தையை பார்த்த எனது 2வது கணவர் சந்தோஷப்பட்டார். ஆனால் போலீசார் வந்து என்னை பிடித்து விட்டனர். எனது நாடகம்  கனவருக்கும் தெரிந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். சுமார் 250 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து துரிதமாக துப்பு துலக்கிய போலீசாரை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பாராட்டினார்.

Tags : Pollachi Government Hospital , Mother and daughter arrested for abducting baby girl from Pollachi Government Hospital: Sensational confession
× RELATED பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2...