×

ஏர்போர்ட், துறைமுகம், கார்கோவில் பணிபுரிந்த சுங்கத்துறை அதிகாரிகள் 43 பேர் அதிரடி மாற்றம்

சென்னை: சென்னை விமான நிலையம், துறைமுகம், கார்கோ பகுதிகளில் பணியாற்றி வந்த சுங்கத்துறை அதிகாரிகள் 43 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம், துறைமுகம், சரக்கு பிரிவான கார்கோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுங்கத்துறை துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால், இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை சுங்கத்துறை தலைமை அலுவலக கூடுதல் ஆணையர், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அதேபோல் 8 சுங்கத்துறை அதிகாரிகளை சுங்கத்துறை முதன்மை ஆணையர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து, உயரதிகாரிகள் 43 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 30 பேர் உதவி ஆணையர்கள், 13 பேர் துணை ஆணையர்கள். இவர்கள் துறைமுகத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் கார்கோ பகுதிகளுக்கும், அதேபோல் கார்கோவில் ஏற்றுமதி பிரிவில் பணியில் இருப்பவர்கள், இறக்குமதி பகுதிக்கும், இறக்குமதி பகுதியில் இருப்பவர்கள் ஏற்றுமதி பகுதிக்கும், சிலர் விமான நிலைய கூரியர் அலுவலகம், போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபற்றி சுங்க அதிகாரிகள் கூறும்போது, ‘‘இது வழக்கமாக நடக்கும் பொது இடமாற்றம்தான். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிர்ப்பதற்காக, நிர்வாக காரணங்களுக்காக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : 43 customs officers who worked in airport, port and cargo have been transferred
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...