இமாச்சல் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

ஷிம்லா:  இமாச்சலில் குலு மாவட்டத்தில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப்பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் உள்ள ஷைன்ஷெர் பகுதியில் இருந்து சைன்ஜ் நோக்கி தனியார் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 30  பேர் பயணித்தனர். ஜங்கலா கிராமத்தின் அருகே கொண்டை ஊசி வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக  சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. முதலில் 16 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 13 பேர் பலியானதாகவும், 2 பேர் படுகாயமடைந்ததாகவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையும் காயமடைந்தவர்களுக்கு ₹50ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதே போல, இமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூர், பலியானவர்களின் குடும்பத்திற்கு ₹5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ₹15,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக கூறி உள்ளார்.

Related Stories: