×

துணை ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்குகிறது. நாட்டின் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் இந்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.  

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு 22ம் தேதி கடைசி நாள். மக்களவை, மாநிலங்களவையில் ஆளும் தேஜ கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. துணை ஜனாதிபதி மாநிலங்களவைக்கு தலைவராக இருப்பார். ஜனாதிபதி தேர்தலில் நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் இரு அவைகளை சேர்ந்த 788 எம்பிக்கள் மட்டும் வாக்களிப்பார்கள். இரு அவைகளிலும் உள்ள நியமன உறுப்பினர்களுக்கும் வாக்கு அளிக்க உரிமை உண்டு. ஜனாதிபதி தேர்தலை போல் அல்லாமல் இந்த தேர்தல் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும். இப்பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும்  ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

Tags : vice presidential election , Filing of nominations for the vice presidential election begins today
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...