×

2014ல் -7 2022ல் -19 மாநிலங்களில் பாஜ கூட்டணி அரசு; மாப்ள அவரு தான்... ஆனா சட்டை என்னுது...:ஆபரேஷன் தாமரையால் கேள்விக்குறியாகும் ஜனநாயக தேர்தல் திருவிழா

ஜனநாயகம் என்று பெருமையாக சொல்லி கொள்ளும் நம் நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்படும் அரசுகள் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டு வருவது ஜனநாயகத்தின் மீதான பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு என்பது, இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். சில ஆண்டுகளாகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு வெகு காலம் பல மாநிலங்களில் நிலைப்பதில்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் அல்லது கூட்டணி அரசுகள் வெற்றி பெறும் மாநிலங்களில் ‘ஆபரேஷன் தாமரை’, ‘குதிரை பேரம்’ என்று பல வியூகங்கள் அமைத்து எம்எல்ஏக்களை இழுத்து அரியணையில் அமர்கிறது பாஜ.

‘ஜனநாயகத்தின் தாய் இந்தியா என ஒவ்வொரு இந்தியனும் இன்று பெருமையுடன் கூறிக் கொள்ள முடியும். ஒவ்வொரு இந்தியனின் மரபணுவிலும் ஜனநாயகம் உள்ளது,’ என சமீபத்தில் ஜி-7 மாநாட்டின் இடையே ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். ஆனால், இந்த ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறதா என்பதை நம் நாட்டின் பிரதமரே உறுதி செய்ய வேண்டும்.

காரணம் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு அரசை செயல்படவிடாமல், ஒரு சர்வாதிகாரத்துடன் ஆட்சி கவிழ்த்து அவர்கள் விரும்பியதுபோல் பாஜ ஆட்சி அமைக்கிறது. இதற்காக மாற்று கட்சி எம்எல்ஏக்களை ஒரு சொகுசு ஓட்டல் மற்றும் ரிசார்ட்டில் பல நாட்கள் தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய சகலமும் சீரும் சிறப்புமாக செய்து கொடுக்கின்றனர். இதில் பணியாதவர்களை 3டி ஆயுதங்கள் (சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை) மற்றும் கவர்னர்கள் மூலம் தங்கள் வலைக்குள் இழுத்து போடுகின்றனர்.

2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சியை பிடித்து பிரதமராக மோடி பதவியேற்கும் போது, 7 மாநிலங்களில் மட்டுமே பாஜ ஆட்சியில் இருந்தது. 14 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆண்டுகள் செல்ல செல்ல காட்சிகளும் மாறின. ஒவ்வொரு மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது பாஜ.வின் மெகா வியூகத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் கிளீன் போல்டாகி அரசைபறிகொடுத்தது காங்கிரஸ். பல மாநிலங்களில் மக்களின் தீர்ப்புக்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ‘ப’ வைட்டமினை ஸ்வீட் பாக்சாக கொடுத்து தங்கள் பக்கம் இழுத்தும், 3டி ஆயுதத்தை பயன்படுத்தியும், குறுக்கு வழியிலும் தனது ஆட்சியை பாஜ அமைத்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பாஜ கூட்டணி ஆளும் மாநிலங்கள் (யூனியன் பிரதேசங்கள் உட்பட) 19 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 11 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தும், எம்எல்ஏக்களை இழுத்தும் பாஜ ஆட்சி அமைத்து உள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர் என வெறும் 2 இடத்தில் மட்டுமே காங்கிரஸ் இப்போது ஆட்சியில் உள்ளது.‘நீ படிச்ச ஸ்கூல நான் ஹெட் மாஸ்டர்’ என்பதுபோல், ‘நீ யாருக்கு ஓட்டு போட்டாலும் தலைவிதி என் கையில்’ என்று சொல்லாமல் செயலில் காட்டுகிறது பாஜ. ‘ஆபரேஷன் தாமரை’ வியூகம் மூலம் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் ஆட்சி பிடிக்க பாஜ காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலை நீடித்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, தேர்தல்கள் எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. இதனால், உலகின் மிகச்சிறந்த ஜனநாயக தேர்தல் திருவிழா என்று போற்றப்படும் இந்திய ஜனநாயக திருவிழாவுக்கு மூடும் விழா நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தப்புமா ராஜஸ்தான்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். இவருக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிளவு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி, சச்சின் பைலட்டை இழுக்க பாஜ முயற்சித்தது. ஆனால், சுதாரித்து கொண்ட காங்கிரஸ் தலைமை, சச்சின் பைலட்டை அழைத்து பேசி பாதுகாத்து கொண்டது. காங்கிரஸ் கொஞ்சம் அசால்ட்டாக விட்டு இருந்தால், அங்கு இந்நேரத்தில் பாஜ அரசுதான் அமைந்திருக்கும். சச்சின் பைலட்டுக்கு கொடுத்த வாக்குறுதியை  தலைமை நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை இழுக்க பாஜ தீவிரமாக முயற்சித்து வருவதால், எந்நேரத்திலும் காட்சிகள் மாறலாம்.

அடுத்து தெலங்கானா?: ஒன்றிய அரசு மீது தொடர் குற்றச்சாட்டு, ஆளுநருடன் மோதல், பிரதமரை வரவேற்பதில் தொடர்ந்து புறக்கணிப்பு என பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய அரசுடன் மோதி வருகிறார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ். பாஜ செயற்குழு கூட்டம் ஐதாராபாத்தில் நடந்து வரும் நிலையில், பாஜ சார்பில் மோடியை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் மோடியை கடுமையான விமர்சித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சில பேனர்களில், ‘பை..பை..மோடி’ என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலங்கானாவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள், மகாராஷ்டிராவுக்கு அடுத்து தெலங்கானாவில்தான் ஆட்சி கவிழும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்துள்ள முதல்வர். சந்திரசேகர் ராவ், தெலங்கானாவில் ஆட்சி கவிழ்த்து பாருங்கள். அடுத்து ஒன்றியத்தில் உள்ள உங்கள் ஆட்சி கவிழ்க்க முடியும் என்று சவால் விட்டுள்ளார்.

356 சட்டப்பிரிவுக்கு முடிவு கட்டிய எஸ்.ஆர்.பொம்மை வழக்கு

* நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. ஒட்டு மொத்த அதிகாரத்தையும் காங்கிரஸ் கையில் வைத்திருந்தது. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு பிறகு 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் ஆட்சியை பிடித்தது. ஆனால், இந்த அரசு முழுமையாக 5 ஆண்டுகள் ஆளவில்லை. இரண்டே ஆண்டில் 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

* கர்நாடகாவில் எஸ்.ஆர்.பொம்மை தலைமையிலான பொம்மை அரசு 1989ம் ஆண்டு கலைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, பெரும்பான்மை இருப்பதாக எஸ்.ஆர்.பொம்மை கூறியும் ஆட்சி கலைக்கப்பட்டது. ஆட்சி கலைப்பு விவகாரத்தில் குடியரசு தலைவர் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றே தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்று 1994ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மூலம் 356 சட்டப்பிரிவுக்கு கடிவாளம் போடப்பட்டது.

Tags : BJP ,Mapla ,Avaru ,Ana Chatai Enduu ,Democratic election ,Operation Lotus , In 2014 -7 in 2022 -19 states with BJP coalition government; Mapla Avaru Than... But What is the Shirt...: Democratic Election Festival Called into Question by Operation Lotus
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...