மகாராஷ்டிராவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே அரசு வெற்றி: ஆதரவு 164; எதிர்ப்பு 99

மும்பை: ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் நேற்று வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 164 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். 99 பேர் எதிர்த்து வாக்களித்தனர். கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில் பாஜ பதவியை விட்டுத்தராததால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிருப்தி அடைந்தார். பின்னர் உத்தவ் தாக்கரே பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு அமைத்து முதல்வரானார்.

பின்னர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அடுத்த நாள், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக பா.ஜ தலைவர் தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்றார். இதன் பிறகு, சபாநாயகரை தேர்வு செய்ய, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் விதான் பவனில் துவங்கியது. சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொலாபா தொகுதி எம்.எல்.ஏ. ராகுல் நர்வேகர் (45), மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு நடந்தது. நர்வேக்கருக்கு 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இதைதொடர்ந்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நடந்தது. மகாராஷ்டிராவில் மொத்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 288 ஆக இருந்தது. சிவசேனா கட்சி எம்எல்ஏ ஒருவர் இறந்ததால் பலம் 287தான். எனவே பெரும்பான்மை பெற 144 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசுக்கு ஆதரவாக 164 பேர் வாக்களித்தனர். எதிர்த்து 99 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதையடுத்து அவை நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார்.

நேற்று முன்தினம் சபாநாயகர் தேர்தலில் 107 பேர் எதிர்த்து வாக்களித்த நிலையில், நேற்று எண்ணிக்கை குறைந்ததற்கு, அவர்கள் தங்கள் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததுதான்  காரணம் என கூறப்படுகிறது. நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மி ராயிஷ் ஷேக், ஏஐஎம்ஐஎம் கட்சி எம்எல்ஏ ஷா பரூக் அன்வர் ஆகியோர் வாக்களிக்கவில்லை. இதுபோல், 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 6 தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏக்களும், 2 பாஜ எம்எல்ஏக்களும் பங்கேற்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதன் மூலம் ஷிண்டே அரசு தனது முதல் சவாலில் வென்று மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்த உள்ளது.

* சபாநாயகர் உத்தரவு எதிர்த்து மனுதாக்கல்

சிவசேனாவின் சுனில் பிரபு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட புதிய ரிட் மனுவில், ‘உத்தவ் தாக்ரே தான் தற்போது வரையில் சிவசேனா கட்சியின் தலைவராக இருக்கிறார். அதனால் ஏக்நாத் ஷிண்டே பரிந்துரைத்த சட்டப்பேரவை கொறடாவின் உத்தரவை அங்கீகரித்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது’ என தெரிவித்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திராபானர்ஜி மற்றும் மகேஸ்வரி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி கோரிக்கை வைத்தார். அதனை நிகாரித்த நீதிபதிகள், வரும் 11ம் தேதி பிரதான வழக்கோடு இணைத்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

Related Stories: