வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

டொமினிகா: வங்கதேச அணியுடனான 2வது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 35 ரன் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் டி20  தொடரில் (3 போட்டி) விளையாடி வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டி  இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்தது. டாஸ் வென்று பேட் செய்த வெ.இண்டீஸ் 20 ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. அதிகபட்சமாக ரோவ்மன் பாவெல் 61* ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்),  பிராண்டன் கிங் 57 ரன் (43 பந்து,7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன் மட்டுமே எடுக்க, வெ.இண்டீஸ் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 68 ரன் (52 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), அபிப் உசைன் 34 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்தனர். வெ.இண்டீஸ் வீரர்கள் ஒபெத் மெக்காய், ஓடியன் ஸ்மித் தலா 2 விக்கெட் எடுத்தனர். பாவெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வெ.இண்டீஸ்  1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 டொமினிகாவில் நாளை மறுநாள்  நடக்கிறது.

Related Stories: