இந்தியாவுடன் 5வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 378 ரன் இலக்கு

பர்மிங்காம்: இந்திய அணியுடனான 5வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு 378 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசியது. பன்ட் (146 ரன்) - ஜடேஜா (104 ரன்) ஜோடியின் அபார ஆட்டத்தால், இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பேர்ஸ்டோ 106 ரன் விளாசினார்.

இதைத் தொடர்ந்து, 136 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது. கில் 4, ஹனுமா 11, கோஹ்லி 20 ரன்னில் ஆட்டமிழந்தனர். புஜாரா 50 ரன், பன்ட் 30 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். புஜாரா 66 ரன் (168 பந்து, 8 பவுண்டரி) விளாசி பிராடு பந்துவீச்சில் லீஸ் வசம் பிடிபட்டார்.

ஷ்ரேயாஸ் 19 ரன்னில் வெளியேற, பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த பன்ட் 57 ரன் எடுத்து (86 பந்து, 8 பவுண்டரி) ஜாக் லீச் சுழலில் ரூட் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷர்துல் 4, ஷமி 13 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஜடேஜா 23 ரன் எடுத்து (58 பந்து, 1 பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். பும்ரா 7 ரன் எடுத்து அவுட்டாக, இந்தியா 2வது இன்னிங்சில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (81.5 ஓவர்).

இங்கிலாந்து பந்துவீசிச்சில் கேப்டன் ஸ்டோக்ஸ் 4, பிராடு, பாட்ஸ் தலா 2, ஆண்டர்சன், லீச் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அலெக்ஸ் லீஸ் - ஸாக் கிராவ்லி தொடக்க ஜோடி மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடி முதல் விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. கிராவ்லி 46 ரன் (76 பந்து, 7 பவுண்டரி) விளாசி பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த ஆலிவர் போப் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Related Stories: