திருவொற்றியூர், எர்ணாவூர், மணலி, மாதவரம் பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய் அரசு நிலம் தனியார் பெயரில் பட்டா மாற்றம்; விசாரிக்க குழு அமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: திருவொற்றியூர், எர்ணாவூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், போலி ஆவணங்கள் மூலம் தனியார் பெயரில் பட்டாவாக  மாற்றப்பட்டது தொடர்பாக, விசாரிக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொதுமக்கள், சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

திருவொற்றியூர், எர்ணாவூர், மணலி, மணலி புதுநகர், மாதவரம் ஆகிய பகுதிகள் சுமார் 10 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கடந்த 1970ம் ஆண்டு இந்த பகுதிகளில் பெரும்பாலும் காலியிடங்களாக இருந்தது. ஆனால், தற்போது இந்த இடங்களில் ஒன்றிய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்கள், சரக்கு பெட்டகங்கள் இயங்கி வருவதோடு, நூற்றுக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், குடிசைகள் என ஆயிரக்கணக்கில் உருவாகியுள்ளன. இதன் காரணமாக கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது இந்த பகுதிகளை மாநகராட்சியோடு இணைக்க திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து 2011ம் ஆண்டு நகராட்சியாக இருந்த திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகள் சென்னை மாநகராட்சியோடு  இணைக்கப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் சாலைகள், தெரு விளக்குகள், பூங்காக்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக குடியிருப்பு நிலங்களின் மதிப்பு 300 மடங்கு உயர்ந்துள்ளது. வடசென்னை என்றாலே ஒதுக்கப்பட்ட வளர்ச்சி அடையாத பகுதி என்ற பெயர் மாறி தற்போது மேம்படுத்தப்பட்ட பகுதியாக உருமாறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் வடசென்னையின் வளர்ச்சி என்பது மற்ற நகரங்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

 

ஆனால், இத்தனை வளர்ச்சி அடைந்த பின்பும் இன்றும் இந்த பகுதிகளில் அரசின் அலுவலகங்கள்  தனியார் கட்டிடத்தில் இயங்குவது  வேதனைக்குரியதாக உள்ளது. இந்த நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர், மாதவரம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலங்கள் இருந்தன. இவைகளில் புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகள், குளங்கள், ஏரி கரைகள், பூங்காக்கள், கிணறுகள், கோயில் நிலங்கள் போன்றவை போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்று வீடுகளாகவும், மனைகளாகவும் மாறியுள்ளது.

1970ம் ஆண்டு சிட்டா, அடங்கல் பட்டியல்படி அரசு புறம்போக்கு நிலங்கள் என்று குறிப்பிட்ட பல இடங்கள், எந்தவித அரசு ஆணையின்றி தற்போது, பட்டா நிலங்களாக மாறியுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்ட நிலங்கள் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த காலகட்டத்தில் உள்ள தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டுள்ளார்கள், என கூறப்படுகிறது.

 

எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்கவும், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: