×

தரைப்பாலம் மூழ்கினால் போக்குவரத்து பாதிப்பு; போளிவாக்கம் ஏரியை தூர்வார நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம்.  அதே நேரத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகவும் உள்ளது. இங்கு பூண்டி சத்திய மூர்த்தி நீர்த்தேக்கம், புழல் ஏரி,  சோழவரம் ஏரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி என சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் 4 ஏரிகள் உள்ளன. இந்நிலையில், கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது போளிவாக்கம் ஊராட்சி. இங்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரிய ஏரி மற்றும் சித்தேரி என 2 ஏரிகள் உள்ளன.
 
இதில் திருவள்ளூரிலிருந்து பெரும்புதூர் செல்லும் சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது சித்தேரி. இந்த ஏரி தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் போன்ற பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன.   

இதனால் இந்த திருவள்ளூர் - பெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலை வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார், அரசு பேருந்துகள் மற்றும் ஆட்டோ கார் போன்ற இதர வாகனங்களும் சென்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு  பருவமழையின்போதும்  பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பிவிடுகின்றன.

அதேபோல் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட   போளிவாக்கத்தில் திருவள்ளூர் - பெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சித்தேரியும் நிரம்பி விடுகிறது.  திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு மற்றும் அழிஞ்சிவாக்கம் ஓடைகளில் அதிகளவில் மழை பெய்யும்போது நீர் நிரம்புகிறது.  அப்போது அதன் உபரி நீர் திறக்கப்படுவதால் அந்த நீரின் மூலம் போளிவாக்கம் பெரிய ஏரியும்  சித்தேரியும் அதன் முழு கொள்ளைளவை  எட்டிவிடுகிறது.

இதனால் திருவள்ளூரிலிருந்து பெரும்புதூர் செல்லும் சாலையும் தாழ்வான சாலையாக இருப்பதால் ஏரி நிரம்பியதும்  உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.  அந்த நீரானது போளிவாக்கத்தில் உள்ள தரை பாலத்தை மூழ்கடித்து அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ, கார், பஸ்  போன்ற அனைத்து வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

போக்குவரத்துக்கு தடையே ஏற்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. இருந்தாலும்  போளிவாக்கம் சித்தேரியிலிருந்து வெளியேரும் நீரானது நேமம் ஏரிக்கு சென்று அங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுகிறது.  

இருந்தாலும் மப்பேடு மற்றும் அழிஞ்சிவாக்கம் ஏரி நிரம்பியதும் திறந்துவிடப்படும் நீர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மழை நீர் கால்வாய் வழியாக வரும் நீரால் சித்தேரி விரைவில்  நிரம்பிவிடுகிறது. எனவே 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த சித்தேரியை மேலும் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் அல்லது திருவள்ளூர் பெரும்புதூர் சாலையில் உயர் மட்ட பாலமாக அமைத்தால்  நீர் வீணாகாமல் சேமித்து வைக்க முடியும். உபரி ஏரி நீர் வெளியேறி தரைப்பாலம் நிரம்பி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும் விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.



Tags : Bolivakam lake , Traffic impact if bridge sinks; Action to drain Bolivakam lake: Farmers demand
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...